தசைகளை பலப்படுத்த உடற்பயிற்சிக் கூடத்தில் சேருவது, முட்டைகள் அல்லது புரோட்டீன் ஷேக்ஸ் எனப்படும் புரதப் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்வது, சரியான வழிகாட்டுதல்களின்றி புரத பானங்களை உட்கொள்ளத் தொடங்குவது இவையெல்லாம் இன்றைய தேதியில் வழக்கமான செயல்கள் ஆகிவிட்டன.
குறுகிய கால நோக்கில் பார்த்தால் இவை உற்சாகமளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு பொறுப்பற்ற முறையில் இவற்றை எடுத்துக்கொண்டால், அவை உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இது குறித்த கூடுதல் தகவல்களை கல்லூரி ஆசிரியரும் டயட்டீஷியனுமான வந்தனா ககோட்கரிடம் கேட்டறிந்தோம். அவற்றைக் காணலாம்.
புரதம் - இரட்டை முனைகள் கொண்ட வாள்
உடலில் புரதச்சத்து பற்றாக்குறை ஏற்படும்போது தலை முடியும் நகங்களும் சுலபமாக உடையத் தொடங்கும். காயங்கள் குணமடைவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதே நேரம் குறைவான வளர்ச்சியுடன், அதிகப்படியான புரதத்தை உட்கொள்ளுதல் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே அதிக புரதத்தை எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். புரோட்டீன் பவுடர் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கவல்லது. புரதத் தொகுப்பின்போது கழிவுகளை வெளியேற்ற உடலுக்கு உதவுவதில் சிறுநீரகங்கள் பங்காற்றுகின்றன. எனவே அதிக புரோட்டீன் பவுடரை உட்கொள்வது சிறுநீரகங்களுக்கு அதிக வேலை கொடுத்து சேதத்தை ஏற்படுத்தலாம்.
புரத பானங்கள் அல்லது புரோட்டீன் ஷேக்ஸ் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- பாலாடைக்கட்டி தயாரிக்கும்போது தயிரில் இருந்து பிரிக்கப்படும் பாலின் பகுதியே இந்தப் புரதம். இந்தப் புரதம் பொதுவாக விளையாட்டு செயல்திறன்களை மேம்படுத்துவதற்கும் வலிமையை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த புரோட்டீன் ஷேக்ஸ் உணவிற்கான மாற்று அல்ல. உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது அன்றாட புரதத் தேவைகளை பூர்த்தி செய்வது இவற்றின் வேலை ஆகும். இந்த பானங்கள் உடற்பயிற்சியின் முன் மற்றும் / அல்லது பிறகு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். டயட்டீஷியன்களால் பரிந்துரைக்கப்படுபவற்றில் இது உண்மையில் சிறந்தது.
அதிகமான புரதத்தை உட்கொள்வது அனைவருக்கும் அவசியமா?
- ஒரு விளையாட்டு வீரருக்கு அவரது உடல் எடையின் ஒரு கிலோவுக்கு 1.2 முதல் 1.5 கிராம் புரதத்திற்கு மேல் தேவையில்லை. பல ஜிம் பயிற்றுனர்கள் ஒரு கிலோ உடல் எடைக்கு கிட்டத்தட்ட இரண்டு கிராம் புரதத்தை அறிவுறுத்துகிறார்கள். இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
- உணவில் அதிக புரதத்தை சேர்த்துக்கொள்ளும்போது அதிக நீர்ச்சத்தும் அவசியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் இது பலராலும் தவிர்க்கப்படும் நிலையில், பெரும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு இது வழிவகுக்கிறது.
ஒரு டயட்டீஷியனாக எனது ஆலோசனை என்னவென்றால், ஆற்றல் அளிக்கக்கூடிய உணவுப் பொருள்கள், உடலைக் கட்டமைக்கும் உணவுப் பொருள்கள் மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருள்கள் அடங்கிய சீரான உணவில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஊட்டச்சத்தில் மட்டுமே கவனம் செலுத்த முயற்சித்தால், நிச்சயமாக பிற ஊட்டச்சத்துக்களில் பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை ஏற்படும்.
மொத்த கலோரிகளில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமான புரதத்தை உணவில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
புரோட்டீன்கள் மீது மட்டுமே இனியும் கவனம் செலுத்தாமல், அனைத்து முக்கியச்சத்துக்களின் மீதும் இனி கவனம் செலுத்தத் தொடங்குவோம்.
இதையும் படிங்க :மன அழுத்தத்தைப் போக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்!