சென்னை: மக்கள் ஆரோக்கியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அழகிற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் ஆன்லைன் முதல் கடைகள் வரை எங்கு பார்த்தாலும் அழகு சாதனப் பொருட்களின் ஆளுமை அதிகரித்துக் காணப்படுகிறது.
இன்றைய காலத்தில் உணவுப் பழக்க வழக்கம், காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் சருமம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் வறட்சியான சருமம், முகத்தில் பரு, கண்ணைச் சுற்றி கருவளையம், தோல் சுருக்கம், பொலிவற்ற தோற்றம் உள்ளிட்ட பல இருக்கின்றன.
இதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும் பலன் கிடைக்காமல் பலர் தவித்து வருகின்றனர். ஆனால், அந்த அழகு சாதனப் பொருட்களின் மூலப்பொருளாக இருக்கும் சந்தனத்தைப் பயன்படுத்தினாலே போதும், அத்தனை பிரச்னைகளுக்கும் படிப்படியாகத் தீர்வு காண முடியும் என்கிறார்கள், ஆயுர்வேத மருத்துவர்கள்.
உதாரணமாக, சந்தனத்தில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் சருமத்தை இறுக்கமாக்கி, இளமையான தோற்றத்தை ஏற்படுத்தும். கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்கும். முகப்பருக்கள் குறையும். முகத்தில் கரும்புள்ளிகள் வருவதையும் தடுக்கலாம்.