டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கரோனா மருந்துகள் வெற்றிகரமாக 2ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்குள் நுழைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, “உலகளவில் 141 நிறுவனங்கள் கரோனாவுக்காக தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு கட்டத்தில் உள்ள நிலையில், இதில் 26 நிறுவனங்கள் தடுப்பு மருந்தின் முக்கியக் கட்டத்திலுள்ளன.
ZyCoV-D: மனித பரிசோதனைக்கு தயாராகும் கரோனா தடுப்பு மருந்து!
கரோனா நோய்க் கிருமி வேகமாக பரவி வரும் சூழலில், அதற்கு எதிரான தடுப்பு மருந்து நமக்கு அவசியமாகவும், அவசரமாகவும் தேவைப்படுகிறது. கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல், சமூக கலாசார மற்றும் ஒழுங்குமுறையிலும் சிறிது காலமாகும்.
தற்போதைய நிலையில் கரோனா நோய்க் கிருமி தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியாவில் 3 நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இதில் இரு உள்நாட்டு நிறுவனங்கள் முதல்கட்ட மனிதர்கள் மீதான பரிசோதனையை முடித்துள்ளன. அதாவது பாரத் பயோடெக் நிறுவனம், சைடஸ் கெடிலா ஆகிய மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் முதல்கட்ட மருத்துவ பரிசோதனையை 11 இடங்களில் முடித்து 2ஆவது கட்ட பரிசோதனையை தொடங்கிவிட்டன.
ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனம், அந்த தடுப்பு மருந்தின் 2ஆவது மற்றும் 3ஆவது கட்ட மருத்துவ பரிசோதனையை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளது.
அந்த பரிசோதனை 17 இடங்களில் ஒரு வாரத்திற்குள் நடக்கவுள்ளது. நமக்கு கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் வரை, தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.