லண்டன்:ஜூஸ் கடை, இளநீர் கடை என எங்குப் பார்த்தாலும் காகித ஸ்ட்ராக்கள். பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தினால் புற்று நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்திலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அல்லது வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அந்த வகையில் சமீப ஆண்டுகளாக ஜூஸ் கடைகள், இளநீர் கடைகள் ஏன் மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு என அனைத்து இடங்களிலும் காகித ஸ்ட்ராக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை அடிப்படையாகக்கொண்டு குறு சிறு வியாபாரிகளும் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இதற்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் காகித ஸ்ட்ராவிலும் ஏராளமான செயற்கை நச்சு இரசாயனங்கள் கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. PFAS எனப்படும் செயற்கை இரசாயனக்குழு இந்த காகித ஸ்ட்ராக்களில் கலந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதை நீண்ட நாள் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கும் மனிதக் குலத்தின் ஆரோக்கியத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பா மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 39 வகையான காகித ஸ்ட்ரா பிரேண்டுகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அந்த ஆய்வில் பெரும்பாலான பேப்பர் ஸ்ட்ரா பிரேண்டுகளிலும் சுமார் 90 சதவீதம் PFAS எனப்படும் செயற்கை இரசாயனக்குழு கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக 18 வகையான இரசாயன குழுக்கள் அதில் காணப்பட்டுள்ளது. மூங்கில் ஸ்ட்ரா பிரேண்டுகளில் 80 விழுக்காடு இரசாயனங்களும், பிளாஸ்டிக் ஸ்ட்ரா பிரேண்டுகளில் 75 விழுக்காடு இரசாயனங்களும் , கண்ணாடி ஸ்ட்ரா பிரேண்டுகளில் 40 விழுக்காடு இரசாயனங்களும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து வகையான ஸ்டீல் ஸ்ட்ரா பிரேண்டுகளில் இரசாயனங்கள் காணப்படவில்லை எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.