சென்னை: தீபாவளி நாட்களில் காலையில் எழுந்து எண்ணெய் குளியல் மேற்கொள்வார்கள். இதற்குப் புராண ரீதியாக, பவுத்த ரீதியாக, சமண ரீதியாக, அறிவியல் ரீதியாக எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அவரவர் அவர்களுக்கே உரித்தான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை மேற்கொள்கின்றனர். எது எப்படியோ அனைத்திலும் பொதுவாக எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது. இந்த எண்ணெய் குளியலை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
எண்ணெய் குளியல் நலன்கள்: எண்ணெய் குளியல் எடுத்துக்கொண்டால் உடல் சூடு தனியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் இந்த குளியல் காரணமாக உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் பல சுரப்பிகள் சுரப்பதாக ஆயுர்வேதம் சொல்கிறது. அறிவியல் ஆய்வாளர்கள் இதைப் பல ஆண்டுகளாக நம்பவில்லை. ஆனால் பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எண்ணெய் குளியல் எடுப்பதன் காரணமாக, உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் அனைத்தும் குறைந்து நிம்மதியான தூக்கமும், மன அமைதியும் கிடைக்கிறது.
எண்ணெய் குளியல் எப்படி எடுக்க வேண்டும்:தீபாவளி பண்டிகையின்போது தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிப்பது மரபு. இந்த எண்ணெயை தலைக்கு மட்டும் வைத்துக் குளிக்கக்கூடாது. உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து 30 நிமிடங்கள் முதல் சுமார் 1 மணி நேரம் வரை ஊரவைத்துக் குளிக்க வேண்டும். முதலில், கால்களில் தண்ணீர் ஊற்றி படிப்படியாக உடல் முழுவதும் நனைத்து, கடைசியில் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும். இப்படிக் குளிக்கும்போது உடலில் உள்ள சூடு காது, கண், மூக்கு வழியாக வெளியேறும்.