டெல்லியில் 3 மாதங்களாக குளிர் காய்ச்சலால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தொடர் இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் வலி இருந்துள்ளது. இதுகுறித்த ஆய்வில் A (H3N2) என்னும் வைரஸ் பரவல் காரணமாக குளிர்காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொடர் இருமல், தொண்டை வலி அறிகுறிகள் உடன் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட காய்ச்சல் நோயாளிகளின் விவரங்களை சேகரித்த, இந்திய மருத்துவ ஆய்வு மையம் அதைப் பகுப்பாய்வு செய்ததில், பலருக்கு A (H3N2) வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் சிலருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த காய்ச்சலால் உயிருக்கு ஆபத்தில்லை. காய்ச்சல் மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனையின்படி எடுத்துக்கொண்டால், விரைவில் குணமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வைரஸ் காய்ச்சல் என்பதால் பரவக்கூடிய தன்மை கொண்டது. ஆகவே, காய்ச்சல் வந்தவர்கள் முகக் கவசம் அணியலாம். இவர்கள் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் தொடக்கூடாது. இந்த காய்ச்சல் இன்புளூயன்சாவின் துணை வகையாகும்.
நாடு முழுவதும் 3 மாதங்களாக பரவி வருகிறது. இதன் தாக்கம் பன்றிக் காய்ச்சலை விட சற்று அதிகமா இருக்கும். ஜனவரி மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 451 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் 4 முதல் 5 நாட்களுக்கு அதிக காய்ச்சலுடன் காணப்படுவர். அதன்பின் 7 முதல் 10 நாட்களுக்கு தொண்டை வலி ஏற்படும். இதையடுத்து 2 முதல் 3 வாரங்கள் வரை இருமல் நீடிக்கும்.