டெல்லி: தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் (NFHS) நாடு முழுவதும் உள்ள 13 முதல் 19 வயதிற்கு உட்பட்ட 1 லட்சத்து 9 ஆயிரத்து 400 பேரிடம் ரத்த சோகை தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் 21 மாநிலங்களை சேர்ந்த பதின்ம வயது(13-19) பெண்கள் மத்தியில் இரத்த சோகை விகிதம் கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
15 முதல் 19 வயதிற்கு இடைபட்ட வயதுடைய பெண்களுக்கு திருமணம் மற்றும் அதனுடன் தாய்மை அடைவது, குழந்தைக்கு பாலூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த இரத்த சோகை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் படிப்பறிவில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் மத்தியில் இரத்த சோகை விகிதம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை பொருத்தவரை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கான இரத்த சோகை விகிதம் குறைவாக காணப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அதில் அம்மாநிலங்களை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்கையில் சிவப்பு அரிசி, தானியங்கள், கீரை, இறைச்சி உள்ளிட்ட இரும்பு சத்து மிக்க உணவுகளை இயல்பாகவே எடுத்துக்கொள்கின்றனர் என தெரியவந்துள்ளது.