ஹைதராபாத் : ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதியை தேசிய மருத்துவர் தினமாக நாம் கொண்டாடிவருகிறோம். கரோனா பெருந்தொற்று கொடுத்த நெருக்கடி காரணமாக இந்தாண்டு மருத்துவர்களுக்கு வாழ்த்து வெறும் வாய்மொழி சம்பிரதாயமாக அமையவில்லை.
மாறாக பலரும் நெஞ்சார்ந்த நன்றியை உளமார தெரிவிப்பதை பார்க்கிறோம். நம்மில் பலருக்கும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர் தினமாக கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் குறித்து தெரியவாய்ப்பில்லை.
மருத்துவர் பி.சி. ராய்
இந்தத் தினத்தில்தான் (1882 ஜூலை 1) சுதந்திர போராட்ட வீரர், மேற்கு வங்க முதலமைச்சர், அண்ணல் காந்தியடிகளின் மருத்துவர் என பல்வேறு சிறப்புக்குரிய மருத்துவர் பி.சி. ராய் பிறந்தார்.
பிதான் சந்திர ராய் என இயற்பெயர் கொண்ட பி.சி. ராய் மக்களின் பெரும் அன்பிற்கு சொந்தக்காரர். பிகார் தலைநகர் பாட்னாவின் பங்கிபோரா என்ற இடத்தில் பிறந்த இவர், 1948ஆம் ஆண்டு முதல் தன் இறப்பு வரை (1962 ஜூலை 1) மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
அண்ணல் காந்தியின் மருத்துவர்
இவரின் தந்தை பிரகாஷ் சந்திர ராய் கலால் வரி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாயாரும் சமூக செயற்பாட்டாளராக திகழ்ந்தார். இதனால் சிறு வயதிலேயே பி.சி. ராய்க்கு சுதந்திர போராட்டம் மீது தீராக தாகம் ஏற்பட்டது.