ஹைதராபாத்:நாடு முழுவதும் பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு தொடர்பான பீதியும் மக்கள் மத்தியில் எழத்தொடங்கி இருக்கிறது. கடந்த 19ஆம் நூற்றாண்டில் பரவத்தொடங்கிய இந்த டெங்கு காய்ச்சல் தற்போது, உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் நிலையில், உயிரைக் கொல்லும் அளவுக்குத் தீவிரமானதாக இருக்கிறது.
இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படும் நிலையில், இந்த நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பாக சில வழிகாட்டுதல்களைப் பார்க்கலாம்.
டெங்கு கொசு உருவாவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்:மழை நீர் பல நாட்களாகத் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. ஏடிசு என்ற இந்த கொசுக்கள் பூந்தொட்டிகள், வாளிகள், திறந்து கிடக்கும் பிளாஸ்டிக் டிரம், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டப் பல இடங்களில் மழை பெய்யும்போது தேங்கும் தண்ணீரில் இருந்து உருவாகிறது. இப்படி உருவாகும் இந்த கொசுக்கள் கழிவு நீர் மற்றும் அழுக்குகள் சேரும் இடத்தில் இருந்து வெளியேறி மனிதர்களைக் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் உருவாகிறது. இதனால் உங்கள் சுற்றுப்புறத்தில் மழை நீர் தேங்காத வகையில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
வீடுகளில் கொசுக்களை விரட்ட என்ன செய்யலாம்: கொசு பத்தி, கொசு கடிக்காமல் இருக்க கைகள் மற்றும் கால்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை க்ரீம்களை தேய்க்கலாம், மேலும், கடைகளில் விற்கப்படும் கொசு விரட்டி திரவங்களை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், அதில் கவனமுடன் செயல்பட வேண்டும். குழந்தைகள் உள்ள வீடுகளில் அவை குழந்தைகள் கையில் எடுக்கும் இடங்களில் வைக்கக்கூடாது.
மேலும், அந்த கொசு விரட்டிகளின் பின்பக்கம் பரிந்துரைக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வீடுகளில் ஈரம் தேங்கி நிற்காத வகையில் உலர்வுடன் வைத்துக்கொள்ளுங்கள்.