ஹைதராபாத்:உலக அளவில் இரத்த சோகை(anemia) பிரச்சனை மக்கள் மத்தியில் அதீத தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், இரத்த சோகை பிரச்சனை பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் குறைந்தபாடு இல்லை என அமெரிக்காவின் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் & இவாலுவேஷனின் (IHME) முன்னணி எழுத்தாளர் வில் கார்ட்னர் கூறியுள்ளார்.
இரத்த சோகை என்றால் இரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ ஏற்படும் பிரச்சனைதான் இரத்த சோகை. இதன் காரணமாக உடலில் தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் இரத்தத்தில் குறையும். இதனால் உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும்.
இந்த இரத்த சோகை பிரச்சனை உலக அளவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் பொதுவாகக் காணப்பட்டாலும் பெண்கள் தான் இதற்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பருவம் அடைதல், மாதவிடாய், பிரசவம் உள்ளிட்ட நேரங்களில் பெண்கள் உடலில் இருந்து அதீத இரத்தம் வெளியேறுகிறது. இதனால் பெண்கள் இயல்பாகவே இரத்த சோகைக்கு ஆளாகும் காரணிகளாக உள்ளன.
ஆனால் ஆண்கள் மற்றும் குழந்தைகளைப் பொருத்தவரை போதுமான ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக மட்டுமே இரத்த சோகை ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 1.92 பில்லியன் மக்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா நாடுகளில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.
இந்த இரத்த சோகையைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விழிப்புணர்வு, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், மலிவான விலையிலும் இரும்புச் சத்து மாத்திரைகள், ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வுகள், குழந்தை திருமணம் தடை, கருத்தடை தொடர்பான விழிப்புணர்வு, மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளும், திட்டமிடல்களும், செயல்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.