சென்னை: மலர்களின் ராணி, காதல் சின்னம், அன்பின் வெளிப்பாடு என்று பல அர்த்தங்களைக் கொண்டுள்ள ரோஜா பூக்கள் உலக மக்களின் விருப்பமான மலர்களில் ஒன்று. இந்த ரோஜா பூக்களுக்குக் காதலர் தினத்தன்று மட்டும் அல்ல, காலம் முழுவதும் தட்டுப்பாடு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அலங்காரம், மருத்துவ பயன்பாடு, வாசனைத் திரவியம், அழகு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ரோஜாக்களின் வகைகள்; பல நூற்றாண்டுகளாகப் பயிரிடப்பட்டு வரும் ரோஜா பூக்கள் பெரும்பாலும் ஆசிய நாடுகளிலேயே விளைவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் தற்போது உலக நாடுகளிலும் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா பூ வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அதன் நிறம், மணம் மற்றும் தரத்தில் தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. மனிதர்களின் வரலாற்று வாழ்வியலோடு ஒத்து இருக்கும் இந்த ரோஜா பூக்கள், சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் கண்களைக் கவரும் விதமாக இருக்கின்றன.
இதையும் படிங்க:Breakfast Salads in Tamil: சுறுசுறுப்பான நாளை பெற வேண்டுமா: காலை உணவில் சாலட் எடுத்துக்கொள்ளுங்கள்.!
மருத்துவ குணம் கொண்ட ரோஜா மலர்கள்;எடை இழப்பு, மன அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமான பிரச்சனை, நீரிழிவு நோய் பிரச்சனை, குடல் புண் ஆற்ற உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கு ரோஜா இதழ்கள் அருமருந்தாக இருக்கிறது. ரோஜா இதழ்களைப் பச்சையாகவோ அல்லது உலர வைத்து தேநீர் போட்டுக் குடிப்பதோ ஏராளமான நன்மை தரும்.
அழகு பராமரிப்பில் ரோஜா பூக்கள்; சிவப்பு ரோஜா பூக்களை நிழலில் காய வைத்துப் பொடித்து ஒரு கண்ணாடி குவளையில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் இருந்து நான்கு டீ தேக்கரண்டி ரோஜா பூ பொடி அதனுடன் இரண்டு டீ தேக்கரண்டி வெந்தையப்பொடி மற்றும் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்துகொள்ளுங்கள்.
இதனை நீங்கள் அடிக்கடி செய்யும்போது உங்கள் முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் கரடு முரடான சருமம் அனைத்தும் சீராகும். இதைப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஜாச் செடி வளர்ப்பதற்கான குட்டி டிப்ஸ்;பொதுவாகவே ரோஜாச் செடி செம்மண்ணில் மிக நன்றாக வளரும். இந்த ரோஜாச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் இன்றி, இயற்கை உரம் அடிக்கடி போட வேண்டும், பழைய சாத நீர், டீ, காபி மற்றும் காய்கறி கழிவுகளை மக்க வைத்த உரம் உள்ளிட்டவற்றை போட்டுக்கொடுங்கள். பூக்களைப் பறிக்கும்போது காம்புடன் மட்டும் இல்லாமல் இலைகளையும் சேர்த்து கத்திரி கோல் கொண்டு வெட்டி எடுங்கள்.
இதையும் படிங்க:கண் பாதுகாப்பில் வெள்ளரி; என்னென்ன நன்மைகள் இருக்குன்னு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க!