கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி முதல் சர்வதேச அளவில் யோகா தினம் (International Day of Yoga )கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த வருடம் 8ஆவது சர்வதேச யோகா தினம் ஆகும். இந்த கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதத்தில் இந்த வருட யோகா கொண்டாட்டத்தின் கரு, ‘மனிதத்திற்கான யோகா’ என கொண்டாடப்படுகிறது. யோகாவின் நன்மைகளையும் அதன் சிறப்புகளையும் அனைவரும் அறியும் வண்ணம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகா தினத்தின் வரலாறு: இந்தியாவில் 5000 வருடங்களுக்கு முன் தோன்றிய அரிய கண்டுபிடிப்பு யோகா ஆகும். இதன் மூலம் உடல்,மனம் மற்றும் ஆத்மா ஆகிய மூன்றையும் சீராக வைத்துக் கொள்ள முடியும். இவை மூன்றுக்கும் யோகா ஆரோக்கியமான பயன்களை அள்ளி வழங்குகிறது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று அமெரிக்காவின் பொது மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘“யோகா இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசு. இது மனம் மற்றும் உடலின் ஒற்றுமையை உள்ளடக்கியது. யோகா பயிற்சி சிந்தனை மற்றும் செயல் கட்டுப்பாடு மற்றும் நிறைவேற்றம்; மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம்; ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. இது உடற்பயிற்சியைப் பற்றியது மட்டும் அல்ல. மனிதன் மற்றும் இயற்கையுடனான ஒற்றுமை உணர்வை கண்டறிவதாகும்’ என்று கூறினார்.
இதனையடுத்து ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடுமாறு நரேந்திர மோடி பரிந்துரைத்தார். இந்த தேதியில் தான் சங்கராந்தி வருகிறது. மேலும் "இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள் ஆகும். இந்த நாள் உலகின் பல பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. பின்னர் டிசம்பர் 11, 2014 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூன் 21 ஐ 'சர்வதேச யோகா தினமாக' அறிவித்தது.