குழந்தைகள் உரிய வயதில் உரிய வளர்ச்சியை அடைய குறிப்பிட்ட சில திறன்களை சீராக பெற்றிருக்க வேண்டும். அதில் ஒன்று உரிய வயதில் பேச்சு திறன் கொண்டிருப்பது. குழந்தைகள் பேசுவதில் சிரமத்தை சந்தித்தால் சமயங்களில் அவர்களுக்கு காது கேட்பதில் குறைபாடு, பேச்சு திறன் அறிவாற்றலில் குறைபாடு இருக்கவும் வாய்ப்புண்டு. இதற்கான அறிகுறிகள் மற்றும் இதனை சரிசெய்யும் சிகிச்சை முறைகளை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
பேச்சுத்திறன் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து அதை நம்மால் சரி செய்ய முடியும் என்று பெரும்பாலான மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு எந்த வயதிலும் ஏற்படலாம். பிறவிக் குறைபாடுகளான காது கேளாமை, மூளை முடக்குவாதம், அறிவுத்திறன் குறைபாடு, ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, உதடு மற்றும் அன்னப்பிளவு உச்சரிப்பு ஆகியவையும் ஒருவரது பேச்சுத்திறனை பாதிக்கிறது.
பேச்சுத்திறன் குறைபாட்டிற்கான காரணங்கள்
பெரியவர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், முகவாதம், திக்குவாய், குரல்வளம் பாதிப்பு, உணவு உட்கொள்வதில் மற்றும் விழுங்குவதில் ஏற்படும் பாதிப்புகளாலும் பேச்சுத்திறன் குறைபாடு உண்டாகிறது.
விபத்தில் தலையில் அடிபட்டு பேச்சு மற்றும் மொழித்திறன் பாதிப்புக்குள்ளாகவும் வாய்ப்புள்ளது. ஒரு குழந்தை கருவில் உருவாகும்போதிலிருந்து வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை அவர்களைத் தாக்கும் எந்த ஒரு பிரச்னையாலும் பேச்சுக்குறைபாடு ஏற்படலாம்.
குறிப்பாக, சொந்தத்தில் திருமணம் செய்தவர்களுக்கு கரு உருவாகும் சமயத்தில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகளும், கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் மன உளைச்சல், சத்தான உணவு உட்கொள்ளாமல் இருப்பது, அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்வது கர்ப்பக் காலத்தில் நோய்வாய்ப்படுவது ஆகிய காரணங்களாலும் பேச்சுக்குறைபாடு குழந்தைக்கு ஏற்படலாம்.
உலக பேச்சுத்திறன் குறைபாடு விழிப்புணர்வு தினம் பிரசவத்தின்போது குழந்தைக்கு கொடி சுற்றிப் பிறத்தல், பிறந்த உடன் குழந்தை அழாமல் இருத்தல், மேலும் பிரசவ சமயத்தில் ஏற்படும் எந்த விபத்தும் குழந்தையை பாதிக்கும்.
குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் காய்ச்சல், வலிப்பு நோய், மஞ்சள் காமாலை ஆகிய அனைத்தும் பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடுகளுக்குக் காரணம் ஆகும்.
கீழ்கண்ட மாற்றங்கள் குழந்தையிடம் உணராமல் இருந்தால் கவனம்
- குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில், சத்தத்துடன் சிரிக்க ஆரம்பிக்கும். அதுதான் குழந்தைகளின் முதல் பேச்சு. திடீர் திடீரென எச்சில் வடிய சத்தமாகச் சிரிப்பார்கள்.
- மூன்றாவது மாதத்தில், 'ஆ... நா..' என ஒற்றை வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பிக்கும். இந்த வார்த்தைகளை உச்சரிக்கப் பழக்கப்படுத்துவது பெற்றோரின் கடமை.
- நான்காவது மாதத்தில், 'ம்ம்.. கா' எனச் சத்தமாகச் சிரித்துக்கொண்டே பேச ஆரம்பிக்கும். கண்ணாடியைப் பார்த்து ஏதாவது பேசி சிரிக்கும்.
- ஏழாவது மாதத்தில், 'ப்ப்பா.. க்கா..' என வார்த்தைகளைச் சேர்த்துப் பேசும். முதலெழுத்தை விழுங்கி, 'ப்பா' எனக் கூறும்.
- எட்டாவது மாதத்தில், இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து, 'தாதா.. பாபா.. மாமா..' எனப் பேச ஆரம்பிக்கும்.
- ஒரு வயதில், அர்த்தமுள்ள வார்த்தைகளைப் பேசும். உதாரணமாக, 'அம்மா, அத்தை, அப்பா' எனத் திருத்தமாக உச்சரிக்கும்.
- ஒன்றரை வயதில், 10 வார்த்தைகள் வரையில் மழலையில் பேச ஆரம்பிப்பார்கள்.
- இரண்டு வயதில், நாம் சொல்வதைத் திரும்பச் சொல்வார்கள். அதன்பின்னர், பேச்சுத் தெளிவாக வர ஆரம்பித்துவிடும்.
- மூன்று வயதில், பாட்டுப் பாட ஆரம்பித்துவிடுவார்கள். கிட்டத்தட்ட 250 வார்த்தைகள் வரையில் பேசுவார்கள்.
பேச்சுதிறன் குறைபாட்டை சரிசெய்ய..
பேச்சுக் குறைபாடு 2 வயதில் கண்டறியப்பட்டால், உடனே மொழிப் பயிற்சி அளித்து பிறகு 'பேச்சுப் பயிற்சி' (Speech therapy) கொடுக்க முடியும். விரைவில் குறைபாட்டை சரி செய்யவும் முடியும்.
ஆனால், பலர் அறியாமையால் 5 வயதில்தான் குழந்தையை மருத்துவரிடம் கொண்டு செல்கிறார்கள். அப்போது குழந்தையின் பேச்சு வளர்ச்சி ஒரு வயது அளவுக்குத்தான் இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பயிற்சி கொடுத்து அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்டு வர அதிக காலம் தேவை.
பேச்சுத்திறன் என்பது மூளையுடன் தொடர்புடையது. மூளை வளர்ச்சிக் குறைபாட்டின் காரணமாகவும் கூட பேச்சு தாமதப்படலாம். எனவே, குறிப்பிட்ட காலத்தில் குழந்தையின் பிரச்சினையை மிகச் சரியாக கண்டறிந்து சிகிச்சை செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.
இதையும் படிங்க:தாடையை அழகாக மாற்ற சில எளிய பயிற்சிகள்