சென்னை:புற்று நோய்க்கும், ரோஜாக்களுக்கும் என்ன தொடர்பு.? ரோஜா தினத்தை ஏன் புற்று நோயாளிகளுக்கான ஒரு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் எனத் தோன்றலாம். அவை இரண்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியவர் 15 வயது சிறுமி மெலிண்டா ரோஸ். கனடாவைச் சேர்ந்த இவர் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுக் கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி உயிரிழந்தார்.
1994 ஆம் ஆண்டு அஸ்கின்ஸ் ட்யூமர் என்ற அரிய வகை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இன்னும் இரண்டு வாரங்கள்தான் உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தனது தன்நம்பிக்கை மற்றும் மன தைரியம் காரணமாகவும், நோய் கண்டறியப்பட்ட பிறகு அவர் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியின் தருணங்களாக அவர் மாற்றிக்கொண்டதாலும் அவரின் ஆயுட்காலம் இரண்டு வாரம் என்பது இரண்டு வருடங்களாக நீண்டது.
இதையும் படிங்க:புற்று நோயாளிகள் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன?.. ஆய்வில் வெளியான தகவல்.!
அந்த இரண்டு வருடத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கைதான்.. இன்றும் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இறந்து விடுவோம் என்ற தெரிந்த நபரின் மனநிலை எப்படி இருக்கும் சிந்தித்துப் பாருங்கள். பயம், பதட்டம், மன அழுத்தம், வாடிய முகம், அழுகை என வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாக மாறி விடும்.
ஆனால் இதை அத்தனையும் முறியடித்தார் மெலிண்டா ரோஸ். சிரித்த முகம், மகிழ்ச்சியான பேச்சு, பிற புற்று நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் உரையாடல் எனத் தனது வாழ்க்கையை வேறு வழியில் திசை திருப்பி அர்த்தமுள்ள வாழ்நாளை அர்ப்பணித்துச் சென்றுள்ளார்.