நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாகப் போகும் ஆவலுடன், அதற்காக காத்திருக்கும் போது, திடீரென ரத்தக்கசிவு அல்லது ரத்தத்துளிகள் (spotting) ஏற்படுதை பார்த்தால் பயம் கொள்ள வேண்டாம். அது ஒரு நல்ல செய்திக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்பகாலத்தின் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று ரத்தப்போக்கு. பெண்கள் பலரின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒன்று எது கர்ப்பகால ரத்தப்போக்கு என்பதே!
இந்த ரத்தப்போக்கினை நான் எப்படி தெரிந்து கொள்வது, ரத்தப்போக்கின் போது எவ்வளவு ரத்தம் வெளியேறும், அதன் முதல் அறிகுறிகள் என்ன, இந்த ரத்தப்போக்கு எப்படி இருக்கும் என்ற பெண்களின் பல கேள்விகளுக்கு மருத்துவர் மஞ்சுளா விளக்கமளிக்கிறார். "கர்ப்பகால ரத்தப்போக்கு என்பது, கர்ப்பம் தரித்த 7 - 10 நாள்கள் கழித்து, சிறிய அளவில் ரத்தத்துளிகளோ அல்லது கசிவோ ஏற்படும்; இது மிகவும் சாதாரணமானது. கருவுற்ற முட்டை, கர்ப்பப்பையின் உட்சவ்வுகளுடன் இணையும் போது கர்ப்பகால ரத்தக்கசிவு ஏற்படுகிறது".
கருவுறும் அனைவருக்கும் இது பொதுவானதா?
ஆமாம், கர்ப்பகால ரத்தப்போக்கு கர்ப்பமுறும் அனைவருக்கும் பொதுவானது; கர்ப்பத்தின் மிக சாதாரண அறிகுறி இது. கர்ப்பிணிகளில் 1/3 பெண்கள் இந்த ரத்தப்போக்கை அனுபவிக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், இது கர்ப்பத்தின் ஆரம்பக்கால அறிகுறிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
கர்ப்பகால ரத்தப்போக்கு எப்போது, எவ்வளவு காலம் நிகழ்கிறது?
இந்த ரத்தப்போக்கு பொதுவாக கருமுட்டை வெளியான 7 முதல் 10 நாள்கள் வரை நிகழ்கிறது. ரத்தத்துளிகள் சில மணி நேரங்கள் முதல் மூன்று நாட்களுக்கு நீடிக்கும்.
மாதவிடாய் - கர்ப்பகால ரத்தப்போக்கு வித்தியாசம் என்ன?
மாதவிடாய் மெதுவாகத் தொடங்கி, பின்னர் தீவிரமடையும்; ரத்தம் உறைதலுடன் தொடர்புடையாதாகவும் இருக்கலாம். இது நிகழும் போது ரத்தப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கிறது. ரத்தம் பளிச் சிவப்பு நிறமாக இருக்கும். வலி தீவிரமாக இருக்கும்.