சென்னை: பற்கள் முகத்தின் அழகை மெருகூட்டும் என்றால் அது மிகையாகாது. முத்தைபோன்ற பற்கள் வேண்டும் என்பது பலருக்குக் கனவாக இருக்கிறது. சிலருக்குப் பற்கள் இயற்கையாகவே வெண்மையாகவும், வரிசையாகவும் இருக்கும். ஆனால் பலருக்குப் பற்கள் மஞ்சள் நிறத்திலோ, பழுப்பு நிறத்திலோ அல்லது கரையுடனோ காணப்படும். இவர்கள் பொதுவெளியில் வாய் திறந்து சிரிக்கக் கூட தயக்கம் கொள்வார்கள்.
புகைப்படங்களில் கூட சிரித்தபடி போஸ் கொடுப்பதில் விருப்பம் காண்பிக்க மாட்டார்கள். இதுபோன்ற சூழலில் பலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்குக் கவலை தரலாம். இவர்களில் பலர் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பற்களை வெண்மையாக்குவதற்காக பல்வேறு சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர். இவர்களுக்காகத்தான் இந்த டிப்ஸ்.... முடிந்த வரை முயற்சித்துப் பாருங்கள்.. இயற்கையாகக் கிடைக்கும் அழகையும், வெண்மையான பற்களையும் பெறுங்கள்.
உப்பால் பற்களை வெண்மையாக்குங்கள்: 'உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா' என்ற விளம்பரங்களைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். அப்போதே நாம் உணர்ந்திருக்க வேண்டும் பற்களின் நலனுக்கும், அழகுக்கும், உப்புக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதை. உப்பு பொதுவாக ஒரு ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது வாய்வழி சுகாதாரத்திற்கு மிகவும் சிறந்ததாக உள்ளது. அது மட்டும் இன்றி உப்பு கொண்டு பற்களைத் தேய்க்கும்போது பற்கள் வெண்மை பெறும் என்பது உறுதி.
பயன்படுத்தும் முறை: ஒரு டேபிள் ஸ்பூன் உப்பைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்பு கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து விட்டு, இந்த உப்பால் உங்கள் பற்களைக் கைவிரல்கள் கொண்டு மென்மையாகத் தேய்த்துக்கொடுங்கள். 1 முதல் இரண்டு நிமிடம் தேய்த்துவிட்டு வாயைக் கழுவி விடுங்கள். இதை நீங்கள் அன்றாடம் செய்து வரும்போது உங்கள் பற்கள் வெண்மையடையும். குறிப்பு: கல் உப்பைப் பயன்படுத்தக்கூடாது.
தேங்காய் எண்ணெய் கொண்டு வாயைச் சுத்தம் செய்யுங்கள்: தேங்காய் எண்ணெய் இந்திய ஆயுர்வேத மருத்துவத்தின் கூற்றுப்படி பற்களின் வெண்மைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறப்பானது எனக் கூறப்படுகிறது. தேங்காய் எண்ணெயில், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பல் சொத்தை மற்றும் அதனால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும்.
பயன்படுத்தும் முறை:இரண்டு டீ ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். அதை உங்கள் வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உள்ளேயே வைத்துச் சுழற்றிக்கொண்டே இருங்கள். அதன் பிறகு அதைக் கீழே துப்பிவிட்டு வாயைக் கழுவிக்கொள்ளுங்கள். இதை நீங்கள் அன்றாடம் மேற்கொள்ளும்போது உங்கள் பற்களில் உள்ள கரை மற்றும் அழுக்குகள் கரைந்து எண்ணெயுடன் கலந்து வெளியேற்றப்படும் அப்போது உங்கள் பற்கள் வெண்மையடையும். இதைச் செய்த பிறகு உப்பால் பற்களைத் தேய்த்து வாய் கொப்பளிப்பதும் சிறந்ததுதான்.