தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மழையில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பது எப்படி? - How to save phone from rain in etvbharat tamil

மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் உங்கள் ஸ்மார்ட்போனை எவ்வாறு பாதுகாப்பது? மழையில் மொபைல் நனைந்தால் என்ன செய்வது? போனில் உள்ள மதிப்புமிக்க தரவுகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..

மழையில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பது எப்படி?
மழையில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பது எப்படி?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 5:24 PM IST

சென்னை:வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், ஆளையே அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றிவிட்டது இந்த வருட வெயில். பழங்கள், ஜூஸ்கள், 2 வேலை குளியல் என என்னென்னவோ செய்து ஒரு வழியாக வெயில் காலத்தில் இருந்து தப்பி மழைக்காலத்துக்கு வந்தாச்சு.

மழை காலம் என்றதும் உடனே சந்தோஷப்பட வேண்டாம், அதிலும் சமமான சிக்கல்கள் உள்ளது. மழை ரசிக்க தகுந்ததாக இருந்தாலும் துணிகளை துவைப்பது, காயவைப்பது, மழைக் கால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்வது என பல பிரச்னைகள் இருக்கிறது.

இந்த சூழலில் நம் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பதென்பது குழந்தையை பாதுகாப்பது போன்ற ஒன்றாக இருக்கும். வெயில் அடித்தாலும், மழையடித்தாலும், புயலே வந்தாலும் அலுவலகங்களுக்கு போயாக வேண்டும். அதற்காக மழை காலங்களில் ஸ்மார்ட் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்லவும் முடியாது. அலுவலக ஆவணங்கள், தொலைபேசி எண்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் தாங்கியுள்ள பொக்கிஷப் பெட்டியாக தான் ஒவ்வொருவரது ஸ்மார்ட் பொனும் இருந்து வருகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் மழையின் போது கூட உங்கள் ஸ்மார்ட்போன் ஈரமானால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மழைகாலத்தில் இருந்து ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க உதவி குறிப்புகள்:

  • நீர்ப்புகா ஸ்மார்ட் போன் கவர்களை பயன்படுத்தவும்:ஸ்மார்ட் போன்கள் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்பதற்காக அதிகம் செலவு செய்கிறோம். அதுபோல போன் கேஸை வாங்கும் போதும் தரமாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டியது அவசியம். மழை காலங்களில் தண்ணீர் உள்ளே நுழையாத வகையில் உருவாக்கப்படும் வாட்டர் புரூப் மொபைல் கேஸ்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம் போன் கீழே விழுந்தாலும் கீரல் விழாமல், தண்ணீர் பட்டாலும் ஏதும் கோளாறு ஏற்படாமல் சமாளிக்கலாம்.
  • உங்கள் தொலைபேசியை ஜிப்லாக் பையில் வைத்திருங்கள்:வாட்டர் ப்ரூஃப் கேஸ் இல்லாத நேரத்திலோ அல்லது விலை அதிகமாக இருப்பதாக கருதினாலோ அதற்கு பதிலாக ஜிப்லாக் பையை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்கால் ஆன பைகளின் உள்ளே போனை வைத்து ஜிப் போட்டு மூடுவதன் மூலம் மழை நீரில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க உதவியாக இருக்கும்.
  • மழை பெய்யும்போது நேரடியாக வெளியில் எடுப்பதை தவிர்க்கவும்: முடிந்தவரை கனமழையின் போது போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். எதிர்பாராத விதமாக அதிக மழைநீர் போன்களுக்குள் சென்று விட்டால் அது போனின் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கும். மிக அவசியமான சமயங்களில் குடைக்கு உள்ளே வைத்து பயன்படுத்துங்கள் அல்லது மழை பாதிக்காத இடங்களில் ஒதுங்கி பயன்படுத்துங்கள்.
  • ஈரமான கைகளுடன் கவனமாக இருங்கள்:ஈரக்கைகளுடன் போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கைகள் ஈரமாக இருக்கும்போது பிடிமானம் சரியாக இருக்காது. இதனால் எதிர்பாராத விதமாக போன் மழைநீரிலோ அல்லது சேற்றிலோ விழக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க கைகளை துண்டுகள் வைத்து துடைத்துக் கொள்ளுங்கள்.
  • நீர்ப்புகா பையை எடுத்துச் செல்லுங்கள்:மின்னணு சாதன பொருட்களை வைத்துக் கொள்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாட்டர் புரூப் பைகள் கிடைக்கிறது. இவை அதிக மழை பெய்யும் போது கூடுதல் பாதுகாப்பாக அமையும்.

இதையும் படிங்க: நீரிழிவு நோயால் வாய்க்கு இவ்ளோ ஆபத்தா.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

மழையில் போன்கள் ஈரமாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்:சில நேரங்களில் தவிர்க்க முடியாத வகையில் போன்கள் மழையில் நனைந்து விட்டால் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உங்கள் போன்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

  • உடனே செயல்பட வேண்டும்:உங்கள் போன் சேற்றினிலோ மழை நீரிலோ விழுந்து விட்டால் எடுக்கலாமா வேண்டாமா என யோசித்து நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக அதனை தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். வேகமாக செயல்படுவதன் மூலம் அதிக பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
  • உடனடியாக பவர் ஆஃப் செய்ய வேண்டும்:தண்ணீரில் விழுந்த பிறகும் உங்கள் போன் அணையாமல் இருந்தால் அதனை உடனே ஆஃப் செய்யவும். இது போனில் உட்புறத்தில் தண்ணீர் செல்வதால் ஏற்படும் மின் அதிர்ச்சியை (electric shock) தடுக்கும். மேலும் போன் ஈரமாக இருக்கும்போது செயல்படுகிறதா என்று சோதிக்க முயற்சிக்காதீர்கள், ஏனெனில் இது மேலும் சேதத்தை ஏற்படுத்தும்.
  • வெளிப்புற பாகங்கள் மற்றும் சிம் கார்டை அகற்றவும்:முடிந்தால் போன்களுடன் ஒட்டியிருக்கும் போன் கேஸ், போன் கவர்களை அகற்றிவிடுங்கள். போனின் உள்ளே போடப்பட்டிருக்கும் சிம் கார்டு, மெமரி கார்டு ஆகியவற்றையும் அகற்ற வேண்டும்.
  • அதிகப்படியான தண்ணீரைத் துடைக்கவும்: மென்மையான, பஞ்சு இல்லாத துணி அல்லது துண்டைப் பயன்படுத்தி, உங்கள் போனை மேற்பரப்பில் இருந்து தெரியும் தண்ணீரை மெதுவாக துடைக்கவும். பொன்களில் உள்ள போர்ட்கள் அதாவது சார்ஜ் ஏற்ற கூடிய பகுதி, பொத்தான்கள், மற்றும் ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய பகுதிகளில் துணி வைத்து துடைக்க வேண்டும். துடைக்கும் போது போனை அழுத்தி பிடிக்க கூடாது. இதனால் மேலும் தண்ணீர் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.
  • அதிக வெப்பத்தை தவிர்க்கவும்: போனில் உள்ள ஈரத்தை போக்க வெப்பநிலை தேவைப்படும். அதற்காக பொன்களில் உலர்த்த அதிகப்படியான வெப்பம் தரக்கூடிய ஹேர் ட்ரையர்கள், ஓவன்கள் அல்லது மைக்ரோவேவ்களை பயன்படுத்த கூடாது. இது சரிசெய்ய முடியாத சேதத்தை எற்படுத்தும்.
  • அரிசி அல்லது சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தவும்: உங்கள் ஈரமான சாதனத்தை சமைக்காத அரிசி அல்லது சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் உள்ள பாத்திரத்தில் வைக்கலாம். இந்த பொருட்கள் சாதனத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உங்கள் போன் அதில் முழுமையாக மூழ்கியிருப்பதை உறுதிசெய்து, குறைந்தது 24 முதல் 48 மணிநேரம் வரை அப்படியே வைக்கவும். இந்த முறை எஞ்சிய ஈரப்பதத்தை வெளியேற்ற உதவும்.
  • தேவைப்பட்டால் நிபுணத்துவ உதவியை நாடுங்கள்: இந்த செயல்முறைக்குப் பிறகும் உங்கள் போன் செயல்படாமல் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம் அல்லது தண்ணீர் சேதத்தை சரிசெய்வதில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநரை அணுகவும். அவர்கள் சேதத்தின் அளவை மதிப்பீடு செய்து தகுந்த தீர்வுகளை வழங்குவர்.

எச்சரிக்கையாக இருப்பது எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மொபைலில் உள்ள மதிப்புமிக்க தரவுகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க உதவுவதாகவும், தவிர்க்க முடியாத சாதனமாகவும் மாறிப்போன இந்த ஸ்மார்ட் போன்களை மழை காலங்களில் இருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். மழையை கொண்டாடுங்கள்.

இதையும் படிங்க: இப்படி பண்ணிட்டு இருக்கீங்களா?... சருமத்தை பராமரிப்பதாகக் கூறி நாம் செய்யும் தவறுகள்!

ABOUT THE AUTHOR

...view details