சென்னை:மேக்கப்பை விரும்பும் பெண்கள், ஐ மேக்கப்பிற்காக மிகவும் மெனக்கெடுவார்கள். ஏனெனில் கண்களே முகத்திற்கு மேலும் அழகு கூட்டுபவை. ஆகையினால் கண்களை ஹைலைட் செய்வதற்கு, ஐ லைனர் (Eye Liner), காஜல் (Kajal), ஐ ஷேடோ (Eye Shadow), ஐ லாஸ் (Eye Lashes), மஸ்காரா (Mascara), காண்டாக்ட் லென்ஸ் (Contact Lenses) போன்றவற்றை பயன்படுத்துவர். ஆனால் இவற்றை தினம் தோறும் பயன்படுத்தும் போது, பல்வேறு நோய் தொற்று ஏற்படும் ஆபாயம் உள்ளது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஐ லைனர்: ஐ மேக்கப்பை பொருத்தவரை ஐ லைனர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐ லைனரில் மெழுகு, சிலிகான், எண்ணெய் போன்றவை இருக்கும். இதை கண் இமையின் உட்புறத்தில் பயன்படுத்தும் போது, அது கண்ணுக்குள் சென்று சேதம் ஏற்படுத்தும். நீண்ட நேரம் இருக்கும் ஐ லைனரை (Long Lasting Eye Liner) பயன்படுத்தும்போது, அவற்றை அகற்றுவது கடினம். ஆதலால் கண்களுக்கு அழுத்தம் கொடுத்து நீக்குகிறோம். இது கண்களுக்கு அசவுகரியத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். மேலும் கண்களின் வாட்டர் லைனில் எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. இவை கார்னியாவைப் பாதுகாக்கும். இந்தப் பகுதியில் ஐ லைனரை போடும் போது, எண்ணெய் சுரப்பதைத் தடுத்து கண்களின் பாதுகாப்பிற்கே கேள்விக் குறியாக அமைந்துவிடும்.
காஜல் அல்லது கண் மை: கண்களின் வாட்டர் லைனில் காஜலை போடும் போது, பாக்டீரியாக்கள் நேரடியாக கண்ணுக்குள் நுழையும். இதனால் கண்களில் தொற்று நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
காண்டாக்ட் லென்ஸ்:ஐ மேக்கப்பில் தவிர்க்க முடியாதது காண்டாக்ட் லென்ஸ் என்றே கூறலாம். காண்டாக்ட் லென்சில் உள்ள வைப்புகள், கண்களிலேயே தங்கி விடுகின்றன. இவை கண்களில் வறட்சியை ஏற்படுத்துகின்றன. மேலும், கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
மஸ்காரா:மஸ்காரா பழையதாக இருக்கும் பட்சத்தில், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படும் பாதிப்பு உள்ளது. அதிகளவு கெமிக்கல் உள்ள மஸ்காராவை உபயோகப்படுத்தும் போது, அது இமை முடி உதிர்வதற்கும் வழி வகுக்கின்றன.
தவிர்க்க முடியாத சூழலில் என்ன செய்யலாம்:இவை அனைத்தும் நீங்கள் அன்றாடமோ அல்லது அதிக அளவிலோ பயன்படுத்தும்போது ஏற்படலாம். தவிர்க்க முடியாத சில சூழல்களில் நீங்கள் மேக்கப் போட்டே ஆக வேண்டும். குறிப்பாக திருமண பெண்கள், மாடல்ஸ், நடிகர் நடிகைகள், டிவி ஷோ தொகுப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் மேக்கப் போட்டே ஆக வேண்டும் என்ற சூழலில் இருப்பார்கள். அது மட்டும் இன்றி கல்லூரிக்கு செல்லும் பெண்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் என பலரும் தவிர்க்க முடியாத சூழலில் மேக்கப் போடுகிறார்கள். இவர்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
கண்களில் நோய் தொற்று ஏற்படாதவாறு மேக்கப் போடுவது எப்படி?
- கண்களுக்கு மேக்கப் போடுவதற்கு முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும்
- அதிக கெமிக்கல் உள்ள அழகு சாதன பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.
- அழகு சாதனப் பொருட்களின் காலாவதி தேதியைப் பார்த்து உபயோகிப்பது அவசியம்.
- ஹைபோஅலர்கெனிக் ஐ மேக்கப்பை பயன்படுத்துவது நல்லது.
- காண்டாக்ட் லென்சுகளை பயன்படுத்தும் போது, லென்சு கரைசலை ஊற்றி நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
- தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு மேக்கப்பை அகற்ற வேண்டும்.
- மஸ்காரா மற்றும் ஐ லைனர் பிரஷ்களையும் சுத்தமான நீரில் கழுவி பின் உபயோகப்படுத்த வேண்டும்.
- கண்களில் எரிச்சல் மற்றும் தொற்று ஏற்படும் பட்சத்தில் கண் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
- கண் உள் இமைகளில் அதாவது வாட்டர் லைனில் ஐ லைனரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
இதையும் படிங்க:How to whiten your teeth naturally: பற்கள் மஞ்சளா இருக்கா? கரை இருக்கா? முத்துப்போன்ற பற்களைப் பெற இதை ட்ரை பண்ணுங்க.!