சென்னை:சென்னை வாழ் மக்கள் மத்தியில் கடந்த 3 ஆண்டுகளில் 50 சதவீதத்திற்கும் மேல் உலர் கண் நோய் (DED) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, இளம் பருவத்தினர் மத்தியில் அதிகம் காணப்படுவதாகவும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கருவிழிப்படலம் மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சை சிறப்பு நிபுணர் மருத்துவர் ரஞ்சிதா ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். காற்று மாசு, சூடான வெப்பநிலை, கல்வி, பணி மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக டிஜிட்டல் திரைகளை நீண்டநேரம் தொடர்ந்து உற்றுநோக்குவது உள்ளிட்ட பல காரணங்களால் உலர் கண் நோய் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலர் கண் நோய் என்றால் என்ன?:கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க போதுமான அளவு கண்ணீரைக் கண் சுரப்பிகள் தயாரிக்காத போது அல்லது மிக வேகமாகக் கண்ணீர் உலர்ந்துவிடும் போது உலர் கண் நோய் ஏற்படுகிறது. உலர் கண் பாதிப்பிற்கான வாய்ப்பு வயது முதிர்ச்சி அடையும்போது அதிகரிக்கும் என்ற போதிலும், காற்று மாசு, பருவநிலை மற்றும் தனிநபர்களின் உடல்நல பாதிப்புகள் உட்பட, பல்வேறு காரணிகள் இந்நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன. இதனால் வயது முதிர்ந்தவர்கள் மட்டும் இன்றி இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கும்.
உலர் கண் நோய் ஆரம்பக்கட்ட அறிகுறிகள்?
- உலர் கண் நோய்ப் பாதிப்பு ஆரம்ப நிலைகளில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது
- படிப்படியாக முன்னேற்றம் அடையக்கூடியதாக உள்ளது
- தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கினால் தாக்கத்தைக் குறைக்கலாம்
- இந்நோய்ப் பாதிப்பைக் கண்டறிவதற்கும், சிகிச்சை பெறுவதற்கும் விரிவான கண் பரிசோதனை தேவை
- சென்னையில் வசிக்கும் மக்களில் ஏறக்குறைய 30 சதவீதம் நபர்களிடையே உலர்கண் நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
- உலர் கண் நோய் வராமல் தடுப்பதற்குத் தேவையான வாழ்வியல் மாற்றங்களைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்
யாருக்கெல்லாம் உலர் கண் நோய்ப் பாதிப்பு ஏற்படும்? சரிசெய்யப்படாத ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ள நபர்கள், கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துபவர்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தன்னெதிர்ப்பு நோய்கள் மற்றும் முடக்குவாதம் போன்ற நோய் நிலைகளில் உள்ள நபர்களுக்கு, DED எனப்படும் உலர் விழி நோய் (dry eye disease) ஏற்படும். ஒளிவிலகல் பிரச்சனைக்காக LASIK போன்ற கண் அறுவைசிகிச்சை செய்துகொண்ட நபர்களுக்கும் உலர் விழி நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
உலர் கண் நோய்க்குப் பருவநிலை மாற்றம் காரணமா?காற்று மாசு மற்றும் சூடான பருவநிலை போன்ற சுற்றுச்சூழல் அம்சங்களும், உலர் கண்கள் பாதிப்பை இன்னும் தீவிரமாக்குவதில் குறிப்பிடத்தக்கப் பங்கை ஆற்றுகின்றன. சென்னை மாநகரில் காற்று தரக் குறியீடு, சராசரியாக 50-க்கும் அதிகமாக இருக்கிறது. காற்று மாசு குறித்து மிதமான அளவு கவலைப்படக்கூடிய நிலை இருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
இங்கு PM 2.5 நிலைகளும், உலக சுகாதார நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற அளவைவிட அதிகமாக இருக்கிறது. இவற்றோடு வெப்பமான பருவநிலையும், காற்றில் அதிக ஈரப்பதமும் சேரும்போது பிரச்சனை மேலும் தீவிரமடைகிறது. இது போன்ற காரணிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, உலர் கண் நோய் உருவாவதற்கான முக்கிய அம்சங்களாக அமைகின்றன.
இளவயது நபர்கள் மத்தியில் அதிகரிக்கும் உலர் கண் நோய்; கல்வி சார்ந்த, பணி சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளுக்காக டிஜிட்டல் (மொபைல், கணினி, டிவி திரைகள்) திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் உலர் விழி நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. திரையை உற்றுநோக்கும் நேரம் அதிகரித்திருப்பது, கண் சிமிட்டும் விகிதம் குறைந்திருப்பதையே இது குறிக்கிறது.
கண் சிமிட்டல் குறையும்போது கண் மேற்பரப்பின் ஆரோக்கியம் பாதிப்படைவதற்கு அது வழிவகுக்கிறது. டிஜிட்டல் கண் அழுத்தம் என்பதும், கண்ணில் நீர்ப்பதாம் உதவுவதால் ஏற்படும் பாதிப்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.