சென்னை: பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் வலி அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு பருவகால மாற்றமும் மாதவிடாயில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குளிர்காலத்தில் மாதவிடாய் வலி அதிகமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குளிர்காலத்தில் மாதவிடாய் வலி அதிகரிப்பதற்கான காரணங்களை முதலில் பார்க்கலாம்.
மாதவிடாய் வலி அதிகரிப்பதற்கான காரணங்கள்:
- குளிர்காலத்தில் சரிவர தண்ணீர் குடிக்காததால், உடலில் நீர்ச்சத்துகுறைந்து மாதவிடாயின் போது அதிக வலி ஏற்படும்.
- குளிர்காலத்தில் இரத்த தமனிகள் சுருங்கி இரத்த ஓட்டத்தை குறைக்கும்.
- குளிர்காலத்தில் குறைந்த அளவிலான சூரியஒளியையே மக்கள் பெறுகிறார்கள். இதனால் சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. மாதவிடாய் உள்ளிட்ட ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்துவதில் விட்டமின் டி பெரும் பங்கு வகிக்கிறது. ஆகவே விட்டமின் டி குறைபாடு, மாதவிடாய் பிடிப்புகளை ஏற்படுத்தி அதிகமான வலியை உண்டாக்குகிறது.
- பனிக்காலங்களில் மக்களின் உடல் உழைப்பு குறைவாகவே இருக்கும். இதனால் மாதவிடாய் பிடிப்புகள் ஏற்பட்டு வலி அதிகமாகும்.
இதை சரிசெய்வதற்கான வழிகள்:
உடலை சூடாக வைத்துக்கொள்ளுங்கள்: வெளியில் செல்லும் போது இலகுவான ஆடைகளை தவிர்த்து, லேயர்கள் உள்ள ஆடைகளை அணியுங்கள். இது தமனிகளின் சுருக்கத்தை குறைக்க உதவும்.
நீரேற்றமாக வைத்திருங்கள்:குளிர்காலத்தில் தண்ணீர் தாகமே இருக்காது. ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படும். ஆகையால் தண்ணீர் மற்றும் பானங்களை அருந்துவது அவசியம். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்யவும் உதவுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு:உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் வலியை குறைக்க முடியும். குறிப்பாக வாழைப்பழங்கள், டார்க் சாக்லேட் (Dark Chocolate), தயிர் (yogurt), பச்சை காய்கறிகள் (Green Leafy Vegetables) போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.