சென்னை:மழைக்காலத்தில் ஏற்படும் ஈரப்பதம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் உறைவிடமாக இருக்கும். இதனால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த நிலை மழைக்காலத்தில் மட்டுமில்லாமல் பனிக்காலத்திலும் தொடரும். ஆகவே எச்சரிக்கையாக நமது வீட்டையும், வீட்டைச் சுற்றிலும் மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
கிருமிகளை அழிக்கும் கிளீனர்கள் பயன்படுத்தி வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தப்படுத்துவது கட்டாயம். ஆனால் பல கெமிக்கல் நிறைந்த கிளீனர்களை பயன்படுத்துவது சுவாசம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். ஆகையால் இயற்கையான கிளீனர்களை பயன்படுத்துவது நல்லது. இதற்காகப் பல கடைகள் ஏறி இறங்கத் தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே, எளிதாக இயற்கையான கிளீனர்களை தயாரிக்கலாம்.
வீட்டைச் சுத்தம் செய்ய கிளீனர்கள்:சந்தைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த கிளீனர்களை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும். குழந்தைகள் உணவுப்பொருட்களைத் தரையில் கொட்டி, அதை மீண்டும் எடுத்துச் சாப்பிடுவது, தரைகளில் விளையாடி விட்டு, கைகளை வாயில் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, தோலில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும்.
எனவே இயற்கையான கிளீனர்களை பயன்படுத்துவது நல்லது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் தரைக்குப் பயன்படுத்தும் கிளீனர்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான கிளீனர் தயாரிக்க அரை வாளி வெதுவெதுப்பான நீரில் அரை கப் வெள்ளை வினிகர், அரை எலுமிச்சை சாறு அல்லது உங்களுக்கு விருப்பமான எசென்ஷியல் ஆயில் சேர்த்து நன்கு கலந்து உங்கள் வீட்டுத் தரையைத் துடைக்கலாம்.
வெள்ளை வினிகர் இயற்கையான கிருமிநாசினி. இது தரையில் படிந்துள்ள அழுக்குகளையும், கிருமிகளையும் நீக்கும். எலுமிச்சை அல்லது எசென்ஷியல் ஆயில் உங்கள் வீட்டை நறுமணத்துடன் வைத்திருக்கும்.
சமையலறை கிளீனர்: வீட்டில் பூஜை அறையை விடச் சமையலறையே மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். சமையலறையை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் நோய் பாதிப்புகளிலிருந்து மீளலாம். சமையலறையில் உள்ள அடுப்பு, ஜன்னல், டைல்ஸ் போன்றவற்றில் அழுக்கு மற்றும் கறை படிந்து, எண்ணெய் பிசுக்கு போன்றவை ஏற்படும்.
இவற்றைச் சுத்தம் செய்ய இரண்டு கப் தண்ணீரில், கால் கப் வினிகர், ஒரு ஸ்பூன் சமையல் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிசுக்கு உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து, அரை மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் எண்ணெய் கறைகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் வாசனையாக இருக்கும்.
ரூம் ஸ்ப்ரே: மழை மற்றும் பனிக்காலத்தில் வீட்டினுள் வெயில் படாமல் இருப்பதால் ஈரப்பதம் ஏற்பட்டு, ஒரு வித நாற்றமடிக்கும். இதைப் போக்க பெரும்பாலான வீடுகளில் ரூம் ஸ்ப்ரேக்களை பயன்படுத்துவர். கெமிக்கல் நிறைந்த ரூம் ஸ்ப்ரே பயன்பாடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லாருக்கும் சுவாச நோய்களை ஏற்படுத்தும். ஆகவே இயற்கையான ரூம் ஸ்ப்ரேக்களை பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம்.
இயற்கையான ரூம் ஸ்ப்ரே தயாரிக்க ஒரு பாட்டிலில் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகள், ஒரு ஸ்பூன் சமையல் சோடா, ஒரு எலுமிச்சை சாறு, எலுமிச்சை தோல் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, அறையின் ஒரு மூலையில் வைக்கவும். இயற்கையான நறுமணம் அறை முழுவதும் வீசும்.
குளியலறை: குளியலறையில் எப்போதும் ஈரப்பதம் இருப்பதால் அங்குப் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆகவே கிருமிநாசினி பயன்படுத்துவது கட்டாயம். இதற்கு ஒரு கப் வினிகரில், முக்கால் கப் பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய், டீ ட்ரீ ஆயில் சேர்த்துக் கலந்து, குளியலறையைச் சுத்தம் செய்தால், குளியலறை சுத்தமாகப் பளபளப்பாக இருப்பதுடன், துர்நாற்றங்களையும் நீக்கும்.
இதையும் படிங்க:முட்டை ஓட்டிற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்... உங்களுக்கு தெரியுமா?