சென்னை: அழகு என்பது வெறும் வார்த்தை அல்ல அது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. புத்தாடை அணியும்போதும், புது நகைகளைப் போடும்போதும் எதற்குக் காலுக்கு ஒரு செருப்பு வாங்கி மாட்டிக்கொண்டால் கூட மனதிற்குள் அவ்வளவு மகிழ்ச்சி. ஏன் என்று யோசித்தது உண்டா.? உங்களை நீங்களே அலங்கரித்து அழகாகக் காட்டிக்கொள்ளும்போது ஒரு தன்நம்பிக்கையும் அதனுடன் சேர்ந்து ஒரு விதமான மகிழ்ச்சியும் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்.
இதையெல்லாம் தாண்டி முகத்தை அழகாக வைக்கவும், சருமத்தைச் சீராக வைக்கவும், முகத்தில் வரும் பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் போக்கப் பலர், பல ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர். சந்தைகளில் விற்கப்படும் அழகு சாதன பொருட்களை வாங்கி முகத்தில் தேய்த்து ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அத்தனை அழகு சாதன பொருட்களும் எதில் இருந்து உருவாக்கப்படுகிறது என்று பார்த்தால் வீட்டில் நாம் வைத்திருக்கும் பொருட்கள் மற்றும் செடி, கொடு, பூக்களையே உள்ளடக்கியதாக இருக்கும்.
இதை நேரடியாகப் பயன்படுத்துவது எப்படி என்பதில்தான் இங்குச் சிக்கல் நீடிக்கிறது. அந்த சிக்கலை நிவர்த்தி செய்யவே இந்த டிப்ஸ். வீடுகளில் தேன் இருக்கும். அந்த தேன் ஆரோக்கியம் தொடர்பானவைகளுக்கு மட்டும்தான் பயன்படும் என நினைத்திருப்போம். ஆனால் தேன் அழகை மெருகேற்றும் ரகசியத்தைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்திற்குப் புத்துயிர் அளித்துப் பராமரிக்கும்.
- வெயில் நேரத்தில் வெளியில் செல்வதாலும், வெயிலில் வேலை செய்வதாலும் பலரது முகம், கழுத்து மற்றும் கை பாகங்கள் பொலிவிழந்து காணப்படும். தோல் வாட்டம் கண்டு நிறத்திலும் மாற்றம் ஏற்படும். இதைச் சரி செய்வதில் தேன் மிக மகத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக ஒரு கப் பசும் பாலில், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் உளுந்து மாவு கலந்து முகம், கழுத்து மற்றும் கைகளில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து அதைத் தண்ணீரால் கழுவவும். இந்த கலவையில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்து பொலிவடையச் செய்யும்.
- முகத்தில் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்க, ஒரு ஸ்பூன் தேனில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரில் அதைக் கழுவவும். இதைத் தினம் தோறும் இரவு தூங்கப்போவதற்கு முன்பு செய்து வாருங்கள் படிப்படியாக முகம் தெளிவு பெரும்.
- 30 வயது கடந்து விட்டாலே முகம் சற்று சுருக்கம் பெறத் தொடங்கும். சிலர் சருமத்தைச் சரிவரக் கவனிக்காமல் விடுவதால் இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படலாம். அதற்குத் தேன் சிறந்த தீர்வு. அதாவது, ஒரு கின்னத்தில் இரண்டு ஸ்பூன் தேன், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கற்றாழை கூழ் சேர்த்து நன்கு கலக்கவும். அந்த கலவையை எடுத்து உங்கள் முகம் மட்டும் இன்றி சுருக்கம் தென்படும் சருமப்பகுதியில் தடவுங்கள். தொடர்ந்து 15 நிமிடம் அதை அப்படியே உலர விட்டு பின்னர் கழுவவும். தொடர்ந்து நீங்கள் இதைச் செய்து வரும்போது உங்கள் சருமம் இளமை தோற்றம் அளிக்கும்.
இதையும் படிங்க:கொசுத் தொல்லை தாங்கலயா? இதைக் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.. செம்ம ரிசல்ட் கிடைக்கும்.!