சென்னை: முகத்தைப் பளபளப்பாக்க மெனக்கெடும் நாம் பாதத்தைக் கவனிக்க மறந்து விடுகிறோம். பாதத்தின் தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்ட பின் தான், நாம் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். பாதத்திற்கு ஏன் அவ்வளவு அக்கறை காட்ட வேண்டும் என நினைத்தால், பாதத்தில் ஏற்படும் வெடிப்பு, அழகு பிரச்சனை மட்டுமின்றி ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருப்பதால் தான்.
வெடிப்பிற்கான காரணம்: அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போலப் பாதத்தின் அழகு ஆரோக்கியத்தில் தெரியும் எனச் சொல்வார்கள். அதிக உடல் எடையும், தோல் வறட்சியும் தான் பாத வெடிப்பிற்கான முக்கிய காரணங்கள். உடலில் உள்ள மற்ற பகுதியில் உள்ள தோல்களை விடக் காலில் உள்ள தோல் மிக தடினமாக இருக்கும்.
காலின் கீழ் பகுதியில் கொழுப்பு அடுக்கு இருப்பதால் உடல் எடை அதிகமனால் அந்த அடுக்கு இடம்மாறி வெடிப்பு ஏற்படுகிறது என ஆய்வு கூறுகிறது. அதை போல, வீட்டை கழுவுவது, துணி அலசுவது என எப்போதும் உப்பு தண்ணீரில் கால் படுவதாலும் வெடிப்பு ஏற்படுகிறது.
எதற்காக அக்கறை?: உடலில் இருக்கும் அனைத்து முக்கிய நரம்பு இணைப்புகளும் பாதங்களில் தான் இருக்கின்றன.பாதங்களை அவ்வப்போது மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி, நரம்புகள் தூண்டப்படுவதால் உடலுடன் மனதும் ரிலாக்ஸாகிறது. பாத வெடிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் வறட்சியடைகிறது என்ற அறிகுறிகளையும் நமக்கு காட்டுகிறது.
கைவைத்தியங்கள்:பாத வெடிப்பின் ஆராம்பகட்ட நிலையென்றால், தினமும் இரவில் கால்களை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயை தடவி வந்தாலே எளிதில் குணமடைந்துவிடும். அதுமட்டுமின்றி இரவு தூங்குவதற்கு முன் குதி கால்களில் மாய்ச்சுரைசரை அப்ளை செய்ய வேண்டும்.