சென்னை: தீபாவளி வந்துவிட்டாலே கொண்டாட்டம்தான். விதவிதமான பலகாரங்கள், பட்டாசுகள், புத்தாடைகள் என வீடுகள் முழுவதும் விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கப்படும். ஆனால் இந்த தீபாவளி நாள் தெய்வீக திருநாள் என்றால் அது மிகையாகாது. அன்றைய தினம் வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து லக்ஷ்மி தேவிக்கும், குபேரனுக்கும் பூஜை செய்தால் வீட்டில் வருமை அகன்று செல்வ மழை பொழியும் என்பது ஐதீகம். இது குறித்து ஆன்மீகவாதியான தேச மங்கையர்க்கரசி கூறிய சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தீபாவளி அன்று எந்த கடவுளை வழிபட வேண்டும்:நாள் தோறும் பலர் தங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடுவது வழக்கம்தான். ஆனால் தீபாவளி நாள் அன்று மஹாலக்ஷ்மியை வழிபடுவது மிகவும் சிறந்தது எனக்கூறியுள்ளார் தேச மங்கையர்க்கரசி. அது மட்டுமின்றி இந்த நாளில் மஹாலக்ஷ்மியுடன் குபேரனையும் நினைவு கூர்ந்து, லக்ஷ்மி குபேர பூஜை செய்தால் வீட்டில் இருக்கும் வருமை நீங்கி, செல்வச் செழிப்போடு வாழலாம் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
லக்ஷ்மியையும், குபேரனையும் ஏன் வழிபட வேண்டும்: குபேரன் திசைக்குரிய கடவுள், செல்வ நலன்களை ஆளுவதற்கான வரத்தைச் சிவ பெருமான் குபேரனுக்கு வழங்கி, லக்ஷ்மி தேவி வழங்கும் செல்வ நலன்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடவுளாக குபேரன் விளங்கி வருகிறார். இதற்கான வரத்தைச் சிவ பெருமான் குபேரனுக்குத் தீபாவளி நாள் அன்று வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நாளில் லக்ஷ்மி குபேர பூஜை செய்தான் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும் லக்ஷ்மி தேவி, குபேரன் மூலமாக உங்களுக்குச் செல்வங்களை வாரி வழங்குவார் என்பது ஐதீகம்.
லக்ஷ்மி குபேர பூஜையை எப்போது, எப்படிச் செய்ய வேண்டும்:தீபாவளி அன்று மாலை 5 மணிக்கு லக்ஷ்மி குபேர பூஜை செய்வது சிறந்தது. அந்த பூஜையை இரவு 8 மணிக்கு முன்பாக முடித்துக்கொள்ள வேண்டும். மஹாலக்ஷ்மி திருவுருவப்படத்தை எடுத்து வைத்து அதற்கு மணம் மிக்க மலர்களால் மாலை அணிவித்து வைத்துக்கொள்ளுங்கள்.