சென்னை:எல்லா மனிதனும் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் முதுகு வலி பிரச்சினையால் அவதிப்பட்டிருப்பர். சில நேரங்களில் குறைவான வலி ஏற்படும், சில நேரங்களில் வலி அதிகமாகி விடும். 35 வயதுக்கு மேல் உள்ளவர்களே முதுகு வலியால் அதிக பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆண்களை விட பெண்களே முதுகுவலியால் அதிக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முதுகுவலி பிரச்சினைகள் எதனால் ஏற்படுகின்றன?, முகுது வலி வராமல் எப்படி தடுப்பது என்று இச்செய்தித் தொகுப்பில் காணலாம்.
முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்:உடலின் பின்புறம், கழுத்து, முதுகு, இடுப்பு என மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. முதுகெலும்பில் உள்ள ஒவ்வொரு எலும்புக்கும் இடையில் ஒரு மென்மையான வட்டு உள்ளது. எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும் போது அவை பிரிந்து செல்லாமல் இருப்பதற்கு இந்த வட்டு உதவுகிறது. முதுகில் அசைவு ஏற்படும் போது, இந்த வட்டுகள் சிறிது தேய்வது இயல்பு. அதே வேளையில் முதுகில் அதிக அசைவுகளை ஏற்படுத்தும் போது, வட்டுக்களில் அதிக தேய்மானம் ஏற்பட்டு, முதுகு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதுகெலும்பு முறிவுகள், விபத்துக்களால் ஏற்படும் முதுகு தண்டில் ஏற்படும் காயங்கள், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது, அதிக உடல் எடை, எலும்புகளின் அடர்த்தி குறைதல், முதுகுப்பகுதியில் உள்ள எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடை வட்டு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் முதுகுவலி ஏற்படும். மன உளைச்சல் காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். மன அழுத்ததில் இருக்கும் போது, முதுகின் தசைகள் சுருங்கி இறுக்கமடையும். நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருக்கும் போது, தசைகளும் நீண்ட நேரம் இறுக்கமடையும். இதனால் முதுகு வலி ஏற்படும்.
மரபணு ரீதியாகவும் முதுகெலும்பு சம்பந்தப்பட்ட நோய்கல் ஏற்படும். மேலும் அடிக்கடி புகைப்படிப்பதாலும் முதுகுதண்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அடிக்கடி புகைப்பிடிப்பதால் முதுகிற்கு இரத்த ஓட்டம் தடைபட்டு, முதுகிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. இதனால் முதுகெலும்பு பலவீனமாகி வலி ஏற்படுகிறது. கூன் போட்டு உட்காருவதும், நடப்பதும் முதுகு வலியை ஏற்படுத்துகின்றன. மேலும் ஸ்டைலாக நடப்பதும் முதுகுவலியை ஏற்படுத்தும்.