சென்னை: மற்ற காலங்களோடு ஒப்பிடும்போது குளிர்காலம் ஜாலியான காலம்தான். ஆனால் இந்த குளிர்காலத்தில்தான் கிருமிகள் அசுர வளர்ச்சி பெற்று, தொற்று நோய்களை ஏற்படுத்தும். நோய்க்கிருமிகள் குழந்தைகளை எளிதாக தாக்கும் என்பதால், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் குழந்தைகளைப் பராமரிக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஆடையில் கவனம்: இந்த காலத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால், குழந்தைகளின் உடல் வெப்பநிலையை பாதுகாப்பது அவசியம். இதற்காக ஸ்வெட்டர்கள், காலுறை, கையுறை, மஃப்ளர்ஸ், குல்லா போன்றவற்றை அணிவிக்கலாம். மேலும் குளிர்காலத்தில் முழுக்கை மேல்சட்டை, பேண்ட் போட்டு விடலாம். மேலும், குழந்தைகள் பயன்படுத்திய ஸ்வெட்டர்களை தவறாமல் துவைத்து, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.
நன்றாக நீர் அருந்த வேண்டும்:குளிர்காலத்தின் ஈரப்பதம் மற்றும் வியர்வை வெளியேறாதது போன்றவற்றால் நீர் தாகம் இருக்காது. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும். ஆகவே போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். குளிர்ந்த நீரை குடிப்பது நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் என்பதால் காய்ச்சி ஆற வைத்த நீரை குடிக்க கொடுக்கலாம். திரவ உணவுகளான பழச்சாறு, ஹாட் சாக்லேட், காஃபின் நீக்கப்பட்ட தேநீர், பால் போன்றவற்றை பருக கொடுக்கலாம். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
கை கழுவுவதை ஊக்குவிக்க வேண்டும்:குளிர்காலத்தில் குழாயிலிருந்து வரும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் கை கழுவுவதை தவிர்த்து விடுவர். பெற்றோர்கள் அதை கவனித்து குழந்தைகள் கைகழுவுவதை ஊக்குவிக்க வேண்டும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் கை கழுவ சொல்லலாம். கழிவறையை பயன்படுத்திய பிறகு சானிட்டைசர் உபயோகிக்க அறிவுறுத்தலாம்.
வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதியுங்கள்:குளிர்காலத்தில் சூரிய ஒளியை பெறுவது முக்கியம். ஆகையால் தினமும் காலை வெளியில் அதாவது சூரிய ஒளிபடும் இடத்திலிருந்து உடற்பயிற்சி செய்வது அவசியம். சூரிய ஒளியில் இருந்து உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைப்பதுடன், உடற்பயிற்சி செய்வது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மருந்துகளில் கவனம்:குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, தும்மல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை போக்க, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை கொடுக்கக்கூடாது. அதிகப்படியான ஆன்டிபயாடிக் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ஆகையினால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.