சென்னை:இன்றைய சூழலில் குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன், விளையாட்டிலும், படிப்பிலும் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். இதே வேளையில் பெரும்பாலான குழந்தைகள், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி, மற்ற குழந்தைகளை விட பின்தங்குகின்றனர். அது மட்டுமின்றி, தன்னால் எதுவும் முடியாது என்று தற்கொலை செய்து கொள்கின்றனர். சமீபத்தில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துவிட்டது. பெற்றோர்கள் சரியான ஊக்கம் அளிக்காமல் இருப்பதும், மனம் விட்டு பேசாததுமே இதற்கு காரணம் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை என்னவென்றால், அவர்களின் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதே ஆகும்.
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க பாடுபட வேண்டும். மேலும், தம் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை குழந்தைகளிடம் பகிர வேண்டும். குழந்தைகள் இதை செய்ய மாட்டேன், பயமாக உள்ளது என்று கூறும் பட்சத்தில், அந்த பயத்தை உடைப்பதற்கு பெற்றொர்கள் மெனக்கெட வேண்டும். இவ்வாறு குழந்தைகளிடம் தன்னமிக்கையை வளர்க்க பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் என்ன என்பதை பார்க்கலாமா?
பாசிட்டிவ்வாக பேசுங்கள்:குழந்தைகள் சில நேரத்தில் தோல்விகளை சந்திக்கும் வேளையில், இது குழந்தைகளின் தன்னமிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி, அவர்களிடம் பாசிட்டிவ்வாக பேச வேண்டும். மேலும் தோல்வியே வாழ்க்கை இல்லை. தோல்விகள் வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மேலும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த தோல்விகளையும், அதன் பின் பெற்ற வெற்றிகளையும் அவர்களிடம் பகிர்ந்து, அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.
ரோல் மாடலாக இருங்கள்: பெற்றோர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள், தோல்விகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை குழந்தைகள் கவனிப்பர். அது அவர்களின் மனத்தில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கும். ஆகையினால் உங்களின் தன்னம்பிக்கை வலுப்பட்டிருக்க வேண்டும்.
மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்:பெற்றோர்கள் பிற குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அம்மாதிரியாக ஒப்பிடும் போது அது, அவர்களுக்கு மன அழுத்தத்தை தரும்.
குழந்தைகளின் முயற்சியை பாராட்டுங்கள்: குழந்தைகள் சிறு சிறு முயற்சிகளை எடுக்கும் போது, அவர்களை பாராட்டுங்கள். குழந்தைகள் வெற்றி பெரும் போது மட்டும் அவர்களை பாராட்டாமல், அவர்கள் எடுக்கும் சிறு முன்னேற்றத்தையும் பாராட்டுவது அவர்களை மகிழ்விக்கும். அந்த முயற்சி விடாமுயற்சியாக மாறி, அவர்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.