திருச்சி: அல்சைமர் என்பது மனிதனின் நினைவாற்றலுடன் தொடர்புடைய ஒரு நோய். அறிவாற்றல் இழப்பு அல்லது நமது வழக்காடு மொழியில் ஞாபக மறதி எனவும் கூறலாம். மக்கள் மத்தியில் இந்த நோய் பொதுவாகக் காணப்பட்டாலும், வயது முதிர்ந்த நபர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.
இந்த ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படும் முதியவர்கள் படிப்படியாக அனைத்தையும் மறந்து தன்னுடன் உள்ளவர்கள் மட்டும் இன்றி, தங்களையும் மறக்க நேரிடும். இதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இந்த நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நினைவாற்றல் என்றால் என்ன? ஒரு நிகழ்வையோ அல்லது செய்தியையோ நம் நினைவில் வைத்து, அதைத் தேவையான நேரத்தில் பயன்படுத்துவதுதான் நினைவாற்றல். இந்த ஆற்றல்தான் மனிதரின் பெரும்பாலான வெற்றி, தோல்விகளை உறுதி செய்கிறது. நினைவாற்றல் குறையும்போது, அவர் தனது வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்க நேர்கிறது. எனவே நினைவாற்றலின் வகை, அதை எப்படி அதிகரித்துக் கொள்வது என்பது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.
நினைவாற்றலை இரு வகையாகப் பிரிக்கலாம்;1. குறுகிய கால நினைவாற்றல், 2. நீண்டகால நினைவாற்றல்.
குறுகிய கால நினைவாற்றல்:இதையும் இரு வகையாகப் பிரிக்கலாம்,உடனடியாகக் கூறும் நினைவாற்றல் (Immediate Memory), அதாவது இப்போது ஒருவர் கூறிய செய்திகளை, அடுத்த விநாடியே அப்படியே கூறுவதாகும். எடுத்துக்காட்டுக்குத் தொலைபேசி எண்களை ஒருவர் சொல்லி முடித்ததும், அடுத்த விநாடியே திரும்பி அதையே சொல்வது. இந்த நினைவாற்றல் மூளையின் ஃபிராண்டல் (Frontal) பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.
குறுகிய கால நினைவாற்றல் (Recent Memory): இது 5 நிமிடங்கள் முதல் 1 மணிநேரத்திற்கு அல்லது ஒரு சில நாட்களுக்கு முன்னால் நடந்தவற்றை நினைவு கூர்வது. எடுத்துக்காட்டுக்கு, காலையில் என்ன உணவு எடுத்துக் கொண்டோம் என்பதை நண்பகல் வேளையில் நினைவு கூர்வது. இந்த நினைவாற்றல் மூளையில் ஹிப்போகாம்பஸ் (Hippocampus) என்னும் பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.
நீண்டகால நினைவாற்றல் (Longterm Memory):சிறுவயதில் நடந்தவைகள் மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவைகளை நினைவு கூர்வது. எடுத்துக்காட்டுக்கு, தற்போது உங்கள் வயது 40 என்று வைத்துக் கொண்டால், நீங்கள் படித்த பள்ளியின் பெயர், அப்போதைய நண்பர்கள் ஆகியவற்றை நினைவு கூர்வது. இந்த நினைவாற்றல் பெருமூளையில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது. இவை தவிர இன்னும் சில நினைவாற்றல் வகைகள் உள்ளன.
செயல் நடைமுறை நினைவாற்றல் (Procedural Memory ):சில வேலைகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பழகி, அதன்படி அதைத் திறம்படச் செய்து முடிப்பது. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், ஊர்தி ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, உடை அணிவது, சமையல் செய்வது ஆகியவையாகும். இந்த நினைவாற்றலைக் கற்றுக் கொள்ளத் தொடங்கும்போது மட்டுமே கடினமாக இருக்கும்.
அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அந்தச் செயலைச் செய்வதற்கு, நாம் அதிகத் துயர் கொள்ளத் தேவையில்லை. மறதி நோயின் முற்றிய நிலையில் கூட இந்த நினைவாற்றல் அவர்களுக்கு நிலைத்து நிற்கும். அதனால்தான் அவர்களால் ஊர்திகளை இயக்க முடியும். ஆனால் எங்கு சென்று, எப்படித் திரும்பி வருவது என்பதை மறந்து விடுவார்கள். இந்த நினைவாற்றல் மூளையின் பேசல் கேங்கிலியா (Basal Ganglia) என்ற பகுதியிலிருந்து வெளிப்படுத்தப்படுகிறது.
உணர்வுகளுக்கான நினைவாற்றல் (Emotional Memory):நம் வாழ்க்கையில், ஒரு சில நேரங்களில் நடக்கும் நிகழ்வுகளால் எதிர்மறை அல்லது நேர்மறை உணர்வுகள் பாதிக்கப்பட்டு, உணர்ச்சிகளின் உச்சத்திற்கு உந்தப்பட்டிருப்போம். இவை நம் நினைவில் எப்போதும் நீங்காமல் நிலைத்திருக்கும்.
அதே எதிர்மறையான நிகழ்வு மீண்டும் நடக்கும்போது, நம் மூளை, நம்மை எச்சரிக்கும் அல்லது நேர்மறையான (மகிழ்ச்சி) நிகழ்வாக இருந்தால் அதை அப்படியே செய்யத் தூண்டும். இந்த நினைவாற்றல் மூளையில் உள்ள லிம்பிக் வளையம் (Limbic Circute) என்ற தனிப்பகுதியிலிருந்து வெளிப்படுத்தப்படுகிறது.
காட்சிகளுக்கான நினைவாற்றல் (Visuo-Spacial Memory):ஓர் இடத்திலிருந்து, வேறு ஓர் இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும், எப்படி திரும்பி நம் வீட்டுக்கு வர வேண்டும் என்று நினைவில் கொள்வது. எடுத்துக்காட்டுக்கு, திருச்சியிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று, மீண்டும் திருச்சியிலுள்ள நம் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றால், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோமோ, அதே வழியில் மீண்டும் திரும்பி வீட்டிற்கு வருவது இந்த நினைவாற்றல் கையில்தான் உள்ளது.
ஒரு சில பாதைகளைத் தவற விடும்போது, இந்த நினைவாற்றல்தான் நம்மை எச்சரிக்கை செய்து மீண்டும், சரியான வழியைத் தேர்ந்தெடுக்கச் செய்கிறது. இந்த நினைவாற்றல் நம் மூளையில் பரைட்டல் (Patietal Lobe) பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது. நினைவாற்றலின் வகைகள் பற்றிப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து நினைவாற்றலை எவ்வாறு அதிகரிப்பது என்று பார்க்கலாம்.
நினைவாற்றலை அதிகரிக்க என்ன செய்யலாம்?நாம் படிப்பதற்கும், தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் எடுப்பதற்கும் ஒரு வேலையை விரைவாகச் செய்வதற்கும் என அனைத்திற்கும் இந்த நினைவாற்றல் மிகவும் தேவை. இதை அதிகரிக்க கண்டிப்பாக முயல வேண்டும். அதற்கான சில வழிமுறைகள் இதோ,
1. இரவு நேர ஆழ்ந்த உறக்கத்தின்போது நினைவாற்றல் வலுவடைகிறது.