சென்னை: உடல் பருமன் என்பது இன்றைய தலைமுறை சந்திக்கும் பெரும் சவாலான பிரச்சனையாக உள்ளது. மரபணு தொடர்பான உடல் பருமனையும் கடந்து இன்றைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் எனப் பலர் உடல் பருமனைக் குறைக்கப் போராடி வருகின்றனர்.
உடல் எடை சரமாரியாக அதிகரிக்கும் வரை துரித உணவு, நொறுக்குத் தீனி உள்ளிட்ட ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கம் குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது இயல்பாகிவிட்டது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து உடல் பருமன் அதிகரித்த உடன் அதைக் கட்டுப்படுத்த புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இந்த உணவுகளை எப்படி எடுத்துக்கொள்ளலாம், எவையெல்லாம் சாப்பிடலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் உடல் எடையைக் குறைக்க எந்த வகையில் உதவும் உள்ளிட்டவை குறித்துப் பார்க்கலாம்.
உடல் பருமன் அதிகரிக்கக் காரணம் என்ன தெரியுமா.? எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்பவர்கள் துரித உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள் உடல் பருமனுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக இவை கொழுப்பாக மாற்றம் அடைந்த உடலில் குவிகிறது.
இதைத் தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் வைத்திருக்கும்போது உடல் பருமன் படிப்படியாக அதிகரிக்கும். மேலும், கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்கள், இனிப்புகள், கேக், பீட்சா, பர்கர் போன்ற நொறுக்குத் தீனிகளை அதிகம் உட்கொள்ளும்போதும் உடல் எடை அதிகரிக்கும்.
உடல் பருமனால் ஏற்படும் பிரச்சனைகள்; உடல் பருமன் அதிகரித்தால் அதற்கு இலவசமாகப் பல நோய்கள் நம்மைத் தேடி வரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். குறிப்பாக, சர்க்கரை நோய், பிபி, செரிமானம், இதயம் தொடர்பான நோய்கள் வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளின் ஆரோக்கிய நன்மைகள்;புரதச்சத்து நிறைந்த உணவுகளை நாள்தோறும் உங்கள் உணவு அட்டவணைக்குள் கொண்டுவருவதன் மூலம் உங்கள் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர இது பெரிதும் உதவியாக இருக்கும். காரணம், புரதம் நிறைந்த உணவுகள் நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும்.
இதனால் உணவு உட்கொள்ளும் அளவு குறைந்து, படிப்படியாக எடை குறையும். வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடை உடல் உறுப்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க, புரதம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
புரதம் நிறைந்த உணவுகள் எந்த அளவுக்குப் பலன் தரும்;புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. ஆரோக்கியமான உடல் தசைகள், எலும்புகள், தோல் மற்றும் முடிக்குப் புரதங்கள் மிக அவசியம். இதனால் புரதம் நிறைந்த இறைச்சி, மீன், கோழி, ஆட்டு இறைச்சி, முட்டை, பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான புரதம் கிடைக்கும்.
எதை உட்கொள்ளலாம், எதை உட்கொள்ளக் கூடாது;பொரித்த உணவுகள், வெண்ணெய் மற்றும் சீஸ் ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, பாதாம், பிஸ்தா, வால் நட்ஸ், எள் போன்ற சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள். இதில் நல்ல புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் அதீத புரதம் நிறைந்த உணவு, சிறுநீரக கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் மருத்து ஆய்வுப்படி புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைத்து ஒரே அடியாக அதிகம் புரதம் நிறைந்த உணவுகளை மொத்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவரின் அறிவுரைகளைப் பெற்று படிப்படியாகப் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:Blood Pressure எகிறுதா? மறதிநோய் வரலாம் எச்சரிக்கை?