சென்னை:கொளுத்தும் கோடை காலங்களுக்கு பிறகு வரும் மழை அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைக்கும். ஆனால் வெயில் காலத்தை விட மழைக்காலத்தை சமாளிப்பது தான் கடினம். காய்ச்சல், சளி, சருமம் வறட்சி உள்ளிட்ட உடல் தொந்தரவுகள் அதிகம் ஏற்பட்டு உடலை சோர்வாக்கும். வடகிழக்கு பருவ மழை தற்போது தொடங்கிய நிலையில் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தொடங்க ஆரம்பித்துவிடும். இந்த குளிர் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பார்க்காலாம்.
தொண்டை வலி: கால மாற்றத்தால் ஏற்படும் முதல் பிரச்சனை தொண்டையில் தான் ஆரம்பிக்கும். குளிர் காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். இதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும். தொண்டை வலி அதிகமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பை கரைத்து, வாய் கொப்பளிக்க வேண்டும். இதற்கு முன்னெச்சரிக்கையாக ப்ளாஸ்க் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
மப்ளர்,கம்பளி:இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் பணிக்கு செல்பவர்கள் சற்று கனமான ஆடைகள், மப்ளர் , கம்பளி, ஸ்வெட்டர் போன்ற உடைகளை அணிந்து கொள்ளவும். முக்கியமாக வயதானவர்கள், ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் காலையில் நடைபயிற்சி செய்வதை தவிர்த்து மாலை வெயிலில் நடக்கவும்.
நீர் சத்து குறைபாடு: குளிர் காலத்தில் தாகம் எடுக்காமல் இருப்பதால் நாம் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுவோம். இதனால் உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் நீர் சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். உடலின் சூட்டை தக்க வைப்பதற்கு இஞ்சி டீ, சுக்குக்காபி போன்ற மூலிகை டீக்களை குடிக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இரவில் தரும் பாலில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கொடுக்கவேண்டும்.