சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதற்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம்.. ஐயோ பட்டாசு வெடிப்பார்களே என்ன செய்வது என்ற அச்சத்தோடு இருக்கும் மக்கள் கூட்டம் மறுபக்கம். இதற்கு நடுவே சுற்று சூழலும், செல்ல பிராணிகளும், வீட்டில் வளர்க்கும் கால்நடைகளும், காக்கை, குருவி உள்ளிட்ட பறவைகளும். நம் கொண்டாட்டங்கள் பிறருக்கு திண்டாட்டமாக இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
தீபாவளி நாள் அன்று பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று, ஒலி என அனைத்தும் மாசுபடுகிறது. பட்டாசு வெடிக்கவே கூடாது என்ற அடிப்படையில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு பல கட்ட பிரச்சனைகளும் நடந்தது. ஆனால் சிவகாசி பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதற்கு பல வழிகாட்டு நெரிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், தனிமனித சிந்தனையின் அடிப்படையில் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருதய நோயாளிகள், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள், பச்சிளம் குழந்தைகள் இருந்தால் அவர்களின் ஆரோக்கியத்தை உங்கள் கொண்டாட்டம் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பட்டாசு வெடிப்பது மனிதர்களை எவ்வாறு பாதிக்கும்:பட்டாசுகளில் காட்மியம் என்ற தனிமம் உள்ளது. பட்டாசுகளை வெடிக்கும் போது, இவை காற்றில் கலந்துவிடும். அந்த காற்றை சுவாசிப்பதால் சாதாரண மனிதர்களுக்கே மூச்சு திணரல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில், இருதய நோயாளிகள், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள், பச்சிளம் குழந்தைகளின் நிலை குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.மேலும் பாச்சு வெடிக்கும்போது அந்த காற்றை சுவாசிப்பதால் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவது மட்டும் இன்றி, பட்டாசுகளில் உள்ள காப்பர் சுவாச பாதையில் எரிச்சலை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.