சென்னை:பச்சைப் பட்டாணி.. பார்ப்பதற்கே அழகாக தோற்றம் அளிக்கும் அந்த பச்சைப் பட்டாணி குளிர் காலத்தில்தான் அதிகப்படியான விளைச்சலையும் தரும். இந்த பச்சைப் பட்டாணியில் அதிகளவு கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, பி, சி, இ உள்ளிட்ட பல்வேறு தாதுக்கள் உள்ளன. சீசனில் மட்டும் கிடைக்கும் இதுபோன்ற சில உணவுப் பொருட்களில் அடங்கி இருக்கும் சத்துக்களை நாம் முழுமையாக நம் உடலுக்குக் கொடுப்பதன் மூலம் நமது ஆரோக்கியம் பல மடங்கு சிறக்கும் என உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த பச்சைப் பட்டாணி பொதுவாக எந்தெந்த அடிப்படையில் பலன் தரும்?
- ஜீரண சக்திக்கு உதவுகிறது
- உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
- சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது
- கண்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
- ஒமேகா சிக்ஸ், கொழுப்பு அமிலங்கள் கர்ப்பிணிப் பெண் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
- இதில் உள்ள இரும்புச் சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.
- வெண்டைக்காயை விட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
- பட்டாணியில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.
உடல் எடை குறைக்கப் பச்சைப் பட்டாணி:
கலோரிகள் குறைவு:பச்சைப் பட்டாணியில் குறைவான அளவு கலோரி இருப்பதால் உடல் எடையைக் குறைக்க அல்லது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்ததாகும்.
புரதம் மற்றும் நார்ச்சத்து:பச்சைப் பட்டாணியின் அதிக புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. அரை கப் பச்சைப் பட்டாணியில் 5 கிராம் புரதம் உள்ளது. பட்டாணியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் படிப்படியாகக் குறைகிறது.