டெல்லி:உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தற்போது வரை அரை பில்லியனாக உள்ள நிலையில், 2050ஆம் ஆண்டில் இது 1.31 பில்லியனாக உயரும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகணத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக ஆசிரியரும், முன்னணி ஆராய்ச்சியாளருமான லியான் ஓங் நீரிழிவு நோய் மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அவரின் இந்த ஆய்வு முடிவுகள் குறித்து "தி லான்செட்" ஆய்வு நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலக அளவில் நீரிழிவு பாதிப்பின் விகிதம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இது உலக சுகாதார நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் 96 சதவீதம் பேர் 2வது வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நிலையில், இது குறித்து லியான் ஓங் ஆய்வு மேற்கொண்டுள்ளார். குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (GBD) 2021 என்ற ஆய்வு முடிவைப் பயன்படுத்தி, 204 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நீரிழிவு நோயின் பரவல், நோயுற்றத் தன்மை மற்றும் இறப்பு ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்துள்ளார்.
அதில், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஏற்பட்ட நீரிழிவு நோய் வயதின் அடிப்படையில் கணக்கிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 2050ஆம் ஆண்டுக்குள் எத்தனை பேர் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நீரிழிவு நோயின் உலகளாவிய விரிவான பரவல் தற்போது 6.1 சதவீதமாக உள்ள நிலையில், ஒருவரின் இறப்பு மற்றும் இயலாமைக்கான நோய்கள் பட்டியலில் நீரிழிவு நோய் முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதேநேரம், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் நீரிழிவு நோயின் பரவல் தற்போது 9.3 சதவீதமாக உள்ள நிலையில், இது 2050ஆம் ஆண்டுகளில் 16.8 சதவீதமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லத்தின், அமெரிக்கா மற்றும் கரீபியனில் 11.3 சதவீதமாக உயரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் நீரிழிவு நோயால் 65 வயதிற்கும் மேற்பட்டோர் 20 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டு வருவதாக ஆய்வாளர் கூறியுள்ளார்.
ஆனால், உலக அளவில் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் 65 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளின் விகிதம் அதிகபட்சமாக 39.4 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா ஆகிய கண்டங்களில் 19.8 சதவீதமாகவும் உள்ளது.
உலக அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 16 வகையான நோய் ஆபத்து காரணிகளில் 2வது வகை நீரிழிவு தொடர்புடையதாக உள்ளது எனக் கூறும் ஆய்வாளர் லியான் ஓங், body mass index on type 2 diabetes ஆபத்து காரணிகளில் முதன்மையானது எனவும் கூறியுள்ளார்.
அதேநேரம், 2வது வகை நீரிழிவு நோயால் உலக அளவில் 52.2 சதவீதம் இயலாமை மற்றும் இறப்பு விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், உணவு பழக்க வழக்கம், சுற்றுச்சூழல், தொழில்சார் பாதிப்புகள், புகையிலை பயன்பாடு, போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் மது அருந்துதல் போன்றவையே என மக்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், அது மட்டும் காரணம் இல்லை எனக் கூறியுள்ள ஆய்வாளர் ஓங், உலக அளவில் நீரிழிவு நோயை தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் அவ்வளவு எளிதல்ல என அறிவுறுத்தியுள்ளார். நீரிழிவு நோய் என்பது ஒருவரின் மரபியல், சமூகம் தாண்டி, ஒரு நாட்டின் நிதி கட்டமைப்பையும் சாரும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் பின் தங்கியுள்ள நாடுகளில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நீரிழிவு நோயை ஒரு நாட்டின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுள்ளார், ஆராய்ச்சியாளர் லியான் ஓங். மேலும், நீரிழிவு நோய் பரவலை புரிந்து கொள்ள உலகம் தவறிவிட்டது எனவும், அதன் விளைவை சந்தித்தே ஆக வேண்டும் எனவும் லான்செட் ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் முக்கிய நோய்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நீரிழிவு நோய், அடுத்த 2 நூற்றாண்டுகளில் அதன் அபார வளர்ச்சியைப் பெற்றிருக்கும் எனவும், இதனை உலக சுகாதார அமைப்புகள் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைந்து மதிப்பிட்டது மட்டுமேயாகும் என லான்செட் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பிறவியிலேயே சர்க்கரை நோய்; தவிர்க்க ஆலோசனை கூறும் ஆய்வாளர்கள்!