ஆண்களின் பாலுறுப்பு சுகாதாரம் குறித்து சில முக்கிய விசயங்களை இப்போது விவாதிக்கலாம்.
பாலுறுப்பு சுகாதாரம் என்பது பொதுவாக, ஆண்குறி, முன்தோல், மொட்டு மற்றும் இடுப்பு பகுதிகளை முறையாக பராமரிப்பதைக் குறிக்கும்.
ஆரம்பக்காலங்களில் விருத்த சேதனம் செய்யாத ஒரு ஆண் குழந்தையை குளிக்க வைக்கும் போது, தாய் அக்குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோலை முறையாக சுத்தம் செய்வார்; ஆணுறுப்பை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது குறித்தும் அந்த குழந்தைக்கு அறிவுறுத்துவார். பின்னர் இது ஆண்களின் தினசரி வழக்கமாக மாறியது.
இன்றைய காலக்கட்டத்தில், ஆண்குழந்தைகளுக்கு முன்தோல் சுத்தம் குறித்து வீடுகளில் கற்பிக்கப்படாததால், பல ஆண்டுகளாக அவர்களின் முன்தோல் சரியாக சுத்தம் செய்யப்படாததால், பாலுறுப்பில் சிறுநீர் மற்றும் ஸ்கலிதத்தின் போது வெளியேறும் விந்து சேர்ந்து, ஸ்மெக்மா என்றழைக்கப்படும் ஒரு படிமம் போல சேர்ந்து விடுகிறது.
அனைத்து இளைஞர்களுக்கும் பாலுறுப்பு சுகாதாரம் பற்றிய அறிவு கற்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது சாதாரண குளியல் சோப் கொண்டு ஆணுறுப்பு, முன்தோல் குறுக்கங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். ஆணுறுப்பின் மீது சோப்பு நீர் படக்கூடாது என்ற தவறான எண்ணம் இங்கு உள்ளது. இது பொய்யான நம்பிக்கை. மருந்து சோப்பு மட்டும் தவிர்க்கப்பட வேண்டும்.
உடலுறவுக்குப் பிறகான சுகாதாரம்:
உடலுறவுக்குப் பின்னர் ஆணுறுப்பை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பது, முன்தோல் மற்றும் ஆணுறுப்பு மொட்டில் தொற்று ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். அதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு ஆணுக்கு பெண் இணையரிடமிருந்து கேண்டிடியாஸிஸ் போன்ற பாலியல் தொற்றுக்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம்.
இடை சுகாதாரம்
உள்ளாடை சுகாதாரம் - குளித்து முடித்ததும், உள்ளாடை அணிவதற்கு முன்பு, பாலுறுப்பு பகுதியை நன்றாக ஈரம் போக துடைக்க வேண்டும். விடுதிகள் மற்றும் பேச்சுலர் அறைகளில் தங்கியிருக்கும் இளைஞர்கள் இந்த உள்ளாடை சுகாதாரத்தைப் புறக்கணிக்கிறார்கள். தினமும் உள்ளாடை மாற்றப்பட வேண்டும்; அவை முறையாக சலவை செய்யப்பட்டு நன்றாக உலர வைக்கப்பட வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உள்ளாடையை மாற்றுவது நல்லது.
உள்ளாடை சுகாதாரத்தை முறையாக கடைபிடிக்காதவர்களின் இடை அரைகளில் சாதாரமாகவே தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதாவது அடிக்கடி அரிப்பு ஏற்படுவது, ஆணுறுப்பு மொட்டுக்களில் நிறம் கறுப்பாக மாறுவது போன்றவை நிகழ்கின்றன. இது நாள்பட்ட பூஞ்சை தொற்றாகும். ஆண் குழந்தைகளுக்கு இந்த கோணமும் அறிவுறுத்தப்பட வேண்டும்.
சரியான உள்ளாடைகளைப் பயன்படுத்துதல்
இன்றைய இளைஞர்கள் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களை அணிகின்றனர். இதனால் அவர்களின் அரைகளுக்கு செல்லும் காற்றின் சுழற்சி தடைபடுகிறது. மேலும் ஜீன்ஸ் பேண்ட்களை நீண்ட நாட்கள் சலவை செய்யாமலேயே அணிகின்றனர். இது அதிகப்படியான ஈரப்பதம் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். இதனால் அவர்களின் இடைபகுதிகளில் தொற்று ஏற்படுகிறது.