கனடா: பதின்ம வயதினர் மத்தியில் அடிக்கடி ஏற்படும் தலைவலிக்கும், தற்கொலை எண்ணத்திற்கும் தொடர்புள்ளதாக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் சில குறிப்பிடுகின்றன. இளம் பருவத்தினர் மத்தியில் தலைவலி என்பது ஒரு சாதாரண விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், அதில் உள்ள உளவியல் ரீதியான காரணிகளைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் கனடாவைச் சேர்ந்த கால்கரி பல்கலைக்கழக ஆய்வாளர் செரீனா எல்.ஓர். ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான கட்டுரை மெடிக்கல் ஜேனல் நியுரோலஜி இதழில் வெளியாகி உள்ளது.
அதில், 14 வயதுடைய 2.2 மில்லியனுக்கும் அதிகமான பதின்ம வயதினர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் 11 சதவீதம் பேர் தொடர்ந்து தங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். அதேபோல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பேர் தனிப்பட்ட அவமதிப்பு, கொடுமைப்படுத்தப்படுதல், அச்சுறுத்தப்படுதல், உருவ கேலி, கருத்துரிமை பறிப்பு, பெயர்களை வைத்து கேலி செய்வது, குடும்ப ரீதியான பிரச்னை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாங்கள் ஆளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர், தங்கள் வாழ்நாளில் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை வழங்கியுள்ளனர். மேலும் தங்கள் நண்பர்கள் அல்லது உடன் பணியாற்றும் ஊழியர்களின் குழுவில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும் நபர்கள் மத்தியில் அடிக்கடி ஏற்படும் தலைவலியானது; மற்ற பிரச்னைகளுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல் 50 முதல் 74 சதவீதம் பேர் மனநிலைப் பாதிப்பு, கவலை உள்ளிட்ட பிரச்னைகளால் தொடர்ச்சியான தலைவலிக்கு ஆளாகின்றனர்.