தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்.. டாக்டர்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?

Monsoon Foods: மழைக் காலத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும், இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மழைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள்
மழைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 1:43 PM IST

சென்னை:மழைக் காலத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும், அவற்றை சாப்பிடக்கூடாததற்கான காரணங்களையும் முந்தைய பதிவில் பார்த்தோம். இப்போது மழைக்காலத்தில் என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்றும், இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் பார்க்கலாம்.

பானங்கள்:புதிதாக தயாரிக்கப்பட்ட வெதுவெதுப்பான கஷாயம், மூலிகை தேநீர், பாயா, சூப் போன்றவற்றை அருந்த வேண்டும். இது போலவே பாதுகாப்பான குடிநீரையும் அருந்த வேண்டும். இந்த பானங்கள் உடலின் எலட்ரோலைட் சமநிலையை பராமரிக்கின்றன. மேலும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.

பழங்கள்: நாவல்பழம், பேரிக்காய், பிளம்ஸ், செர்ரி, பீச், பப்பாளி, ஆப்பிள் மற்றும் மாதுளை போன்ற சீசன் பழங்களை சாப்பிடலாம். இவற்றில் உள்ள விட்டமின் ஏ, விட்டமின் சி, நார்ச்சத்து ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும்.

மசாலா மற்றும் வாசனைப் பொருட்கள்:இலவங்க பட்டை, மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய், மிளகு, இஞ்சி, மஞ்சள் மற்றும் பூண்டு போன்ற மசாலா மற்றும் வாசனைப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இவை நுண்ணுயிர்களான பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பியாகவும், வைரஸ் தடுப்பாகவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகின்றன. டி- செல்கள் அதாவது லிம்போசைட்ஸ் எனப்படும் ஒருவகையான இரத்த வெள்ளை அணுக்களை ஒழுங்குப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் நோய்கிருமிகளிலிருந்து உடலை பாதுகாக்கின்றன.

மசாலாப்பொருட்கள்

காய்கறிகள்:பொதுவாகவே பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், வெண்பூசணி, புடலங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, பீன்ஸ், வெண்டைகாய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வதால் குடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும்.

சுரைக்காய்

நட்ஸ்:மழைக்காலத்திற்கு ஏற்ற உணவு என்று நட்ஸ்களை கூறலாம். முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், விட்டமின்கள், தாதுக்கள் போன்றவை உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.

நட்ஸ்

பூண்டு:ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பூண்டு, ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை எதிர்த்து போராடும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள டி செல்களை அதிகரித்து உடலை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

பூண்டு

மஞ்சள்:மஞ்சள் இயற்கையான கிருமிநாசினி. அதனால் தான் காயம் ஏற்பட்ட இடத்தில் மஞ்சள் பொடியை வைக்கிறோம். மஞ்சள் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், வைரஸ் போன்ற நுண்ணுயிர்களை அழிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மேலும் தொற்றுநோய்களை எதிர்த்து போராடும். பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது, தினசரி உணவில் மஞ்சளை சேர்ப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். அந்த வகையில் அதிகளவு தொற்றுநோய்கள் ஏற்படும் மழைக்காலத்திற்கு மருந்து மஞ்சள் தான்.

மஞ்சள்

எலுமிச்சை:விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது. உங்கள் உணவில் குறிப்பாக சாலட் போன்றவற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். சுவாச பிரச்சினைகள் இருப்பவர்கள் இதை தவிர்க்கலாம்.

புரோபயாடிக் நிறைந்த உணவுகள்:பொதுவாகவே குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் புரோபயாடிக் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. புரோபயாடிக் உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தயிர், மோர், ஊறுகாய், இட்லி, தோசை, பன்னீர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து உடலை பாதுக்காக்க உதவுகின்றன.

இதையும் படிங்க:மழைக் காலத்தில் இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க.. மருத்துவர்கள் கூறும் அட்வைஸ்!

ABOUT THE AUTHOR

...view details