சென்னை:கோடையின் காட்டத்தால் மழைக் காலத்தை ரசிக்கவே செய்கின்றோம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உணவு. கோடைக் காலத்தில் நமக்கு பிடித்த எண்ணெயில் பொறித்த உணவுகள், உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் இறைச்சி, நட்ஸ் போன்றவற்றை சாப்பிட முடியாமல் தவித்து, எப்போது மழைக்காலம் வரும் என்று ஏங்குவோம்.
மழைக்காலம் வந்தவுடன் எண்ணெயில் பொறித்த க்ரிஸ்பியான பக்கோடா, பஜ்ஜி, சிப்ஸ், வடை, சமோசா, சிக்கன், மசாலா பூரி, பானி பூரி, காளான் மசாலா, பேல் பூரி, நண்டு, துரித உணவுகளான மேகி நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ், ப்ரைடு நூடுல்ஸ், பர்கர், மோமோஸ் (Momos) போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவோம். மழைக்காலத்தில் இப்படி நமக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடும் போதும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நினைப்போம்.
ஆனால் மழைக் காலத்தில் தான் அதிக கவனத்துடன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் கோடைக்காலத்தை விட மழைக்காலத்தில் தான் அதிக நோய்தொற்றுகள் ஏற்படும். அப்படியாக மழைக்காலத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும், அவற்றை சாப்பிடக் கூடாததற்கான காரணங்களையும் பார்க்கலாம்.
உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்:மழைக்காலங்களில் தெருவோர உணவுகளையும், ஹோட்டல் உணவுகளுக்கும் நம் மனது ஏங்கும். ஆனால் அவ்வாறாக சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் மழைக்காலம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கான காலம். மழைக்காலம் இவைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற காலம். நீரிலும் உணவிலும் வேகமாக பரவி நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். ஆகையால் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.