ஜெர்மன்: ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஏற்படும் மன அழுத்தத்திற்கான சிகிச்சைகளிலும், மன ஆரோக்கியத்திற்கான அறிவுறுத்தல்களிலும் சமூக ரீதியான சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மன அழுத்தம் என்பது உலக மக்கள் இடையே அதிகரித்து வரும் சமூக நோயாக மாறியுள்ளது. வேலை, பொருளாதாரம், குடும்பம், நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுவாக அனைவருமே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகினர்.
இந்த சூழலில் இது குறித்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆய்வுக் குழு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு மொத்தமாக சுமார் 2 ஆயிரத்து 890 பேரிடம் மன அழுத்தம் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தொடர் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த ஆய்வில் ஆயிரத்து 520 பெண்களும், ஆயிரத்து 370 ஆண்களும் உட்படுத்தப்பட்டனர்.
இரு பாலருக்கும் நடைபெற்ற இந்த ஆய்வில், பெண்கள் மற்றும் ஆண்கள் இடையே மன அழுத்தம் மற்றும் அதன் வெளிப்பாட்டில் அதீத வேறுபாடுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை பொதுவாக அனைவரும் குடும்பம் மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களில் அதீத மன அழுத்தம் கொண்டு உள்ளனர். பயம், பதட்டம் உள்ளிட்ட வெளிப்பாடுகள் அவர்களிடம் தென்பட்டுள்ளது.