டெல்லி:மழைக்காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல் மழைக்காலத்துக்கு ஏற்ப புதிய ஜங்க் உணவுகளும் கிடைக்கும். இந்தச் சூழலில் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, பின்வரும் உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ரோகிணி பாட்டீல் தெரிவித்துள்ளார்.
தண்ணீர்: மழைக்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். குளிர்ச்சியான வானிலை நிலவினாலும், நம் உடலுக்கு நீரேற்றம் தேவைப்படுகிறது. அதனால், ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
சூடான பானங்கள்: மழைக்காலத்தில் மூலிகை தேநீர், சூப் போன்ற சூடான பானங்களைப் பருக வேண்டும். இவை உடலை சூடாக பராமரிப்பதோடு, உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும். கிரீன் டீ போன்ற மூலிகை டீக்கள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் காய்கறிகளால் ஆன சூப்கள், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும்.
சீசன் பழங்கள்:மழைக்காலங்களில் ஏராளமான பழங்கள் கிடைக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும் ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, ஆரஞ்சு பழங்களைச் சாப்பிடலாம். இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, மழைக்கால நோய்கள் வராமல் காக்க உதவும். இந்தப் பழங்கள் உணவில் இயற்கையான இனிப்புச் சுவையை வழங்குகின்றன.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள்:நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்த வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. கிவி, குடை மிளகாய், ப்ரோக்கோலி போன்றவற்றிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி, ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
லேசான மற்றும் சமச்சீரான உணவு: மழைக்காலங்களில் தானியங்கள், புரதங்கள், காய்கறிகள் கொண்ட லேசான மற்றும் சீரான உணவை உட்கொள்ள வேண்டும். இந்த சரிவிகித உணவு பல ஊட்டச்சத்துகளைத் தரும். சிவப்பு அரிசி, குயினோவா(Quinoa) மற்றும் ஓட்ஸ் போன்றவை நார்ச்சத்து மற்றும் உடலின் செயல்பாட்டுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. கோழி இறைச்சி, மீன், டோஃபு(tofu) போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள், தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அதேபோல் காய்கறிகள், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன.