சென்னை:வாழ்க்கையில் இப்போதெல்லாம் எல்லாரும் இந்த தவறை செய்ய ஆரம்பித்து விட்டோம். வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை எல்லாரும் நேரம் தவறிச் சாப்பிடுவதை முறையாகப் பின்பற்றி வருகிறோம். இதனால் என்ன ஆகிவிடப்போகிறது. சாப்பிட டைம் இல்லை, இந்த நேரத்திற்குப் பசிக்கவில்லை என்றெல்லாம் கூறி நேரம் தவறி சாப்பிடுவதால் இருதய நோய்கள் கூட ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பிரான்சில் உள்ள யுனிவர்சிட் சோர்போன் பாரிஸ் நோர்ட் என்ற ஆய்வு உணவு எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான தொடர்பையும் விவரிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய பர்டன் ஆஃப் தீசஸ் ஆய்வில், கார்டியோ வாஸ்குலார் நோய் அதாவது, இதய தசைகள், வால்வுகளில் ஏற்படுகின்ற பாதிப்புகளின் விளைவாகத் தோன்றக்கூடிய பிரச்சனைகளால் ஒரு இலட்சம் மக்கள் தொகையில், 272 பேர் உயிரிழப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற இதழில் வெளியிடப்படப் பிரஞ்சு ஆய்வில், காலை மற்றும் இரவு உணவைச் சரியான நேரத்திற்குச் சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதய நோய்களைத் தடுப்பதில் உணவு நேரத்தின் பங்கு குறித்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை என்றாலும், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரீஜென்சி மருத்துவமனையின் இருதய நோய் நிபுணரான அபினித் குப்தா, நாட்டில் அதிகரித்து வரும் இதய நோயின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.