சென்னை:மாறிவரும் வாழ்க்கை முறையால், பலரும் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயினால் உலகம் முழுவதிலும் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆதலால், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும், இரத்தத்தில் இன்சுலின் அளவைக் குறைக்கவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐ.எஸ் குளோபல் (IS Global) ஆராய்ச்சியாளர்கள், சாப்பிடும் நேரத்திற்கும், டைப் 2 நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பைக் கண்டறிய முயன்றுள்ளனர். இதற்காக 1 லட்சத்து 3 ஆயிரத்து 312 நபர்களின் உணவுப் பழக்கத்தை பகுப்பாய்வு செய்துள்ளனர். காலை 9 மணிக்குப் பிறகு காலை உணவை சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடுகையில், காலை 8 மணிக்கு முன்பே காலை உணவை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 59 சதவீதம் குறைகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்த குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை ஒழுங்குபடுத்துவதில் உணவு நேரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலை உணவை தவிர்ப்பது அல்லது காலை 9 மணிக்கு மேல் சாப்பிடுவதால் உடலில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டை இழக்கும். மேலும், இன்சுலின் ஹார்மோன் சுரப்பு அளவு ஒழுங்கற்றதாக அமையும். இதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகமாகும்.