நியூயார்க் (அமெரிக்கா):நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் சர்க்கரையும், சர்க்கரை சார்ந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் ஆய்வு கூறுகிறது.
உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்குமா? என்ற நோக்கில் ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவிலுள்ள துலேன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மயோ கிளினிக் ப்ரோசீடிங்ஸ் (Mayo Clinic Proceedings) என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
தனி நபர் உப்பு உட்கொள்வதன் அளவைப் பொறுத்து, 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு, ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களை 11 ஆண்டுகள் 8 மாதங்கள் வரை கவனித்ததில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிகளவு உப்பு நுகர்வு டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.