ஹைதராபாத்:ஞாபக மறதி பெரும்பாலும் முதியவர்களுடன் தொடர்புடையது. இன்று அதிகமான இளைஞர்களுக்கு விஷயங்களை நினைவில் கொள்வதில் சிக்கல் உள்ளது. இவை அனைத்தும் அல்சைமர் (Alzheimer’s) நோயின் அறிகுறியா? என்றால் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
அல்சைமர் நோய் என்றால் என்ன?
அல்சைமர் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவித கோளாறு. இது மூளையை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட நபர்களின் நியாபக சக்தி குறைகிறது. அவர்களால் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. இந்த நோய் முதுமை பருவத்தில் பலருக்கு வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பொருள்கள் மற்றும் முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் அடைகின்றனர்.
அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்?
பெரும்பாலும், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் அல்சைமர் நோய் ஏற்படக்கூடும். மரபணு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.
இளைஞர்களுக்கு தாக்க வாய்ப்புள்ளதா?
மருத்துவர்களின் கருத்துப்படி, இளைஞர்கள் விஷயங்களை மறந்துவிடுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. தூக்கமின்மை, செல்போன் பார்த்தல், ஒழுங்கற்ற உணவு உட்கொள்ளல் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகள் ஆகியவை இதில் அடங்கும்.
இவைகள் அல்சைமர் நோயின் அறிகுறியாக இல்லாவிட்டாலும், மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்கள் தொடர்ந்தால் மறதி அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று ஜஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் பிரேம் நாகநாத் நரசிம்மன் கூறினார்.