சென்னை:வரப்போகுது தீபாவளி திருநாள்.. புதிய ஆடைகள் வாங்க வேண்டும்.. தள்ளுபடி விற்பனையில் பொருட்களை வாங்க வேண்டும் என்றேல்லாம் பல கனவுகளை போட்டு பணத்தை சிறுகச் சிறுக சேமித்து வைத்திருப்பீர்கள். அதற்கு தகுந்தார்போல் இ காமர்ஸ் விற்பனையின் அசுரர்களான அமேசான் நிறுவனம் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Great Indian festival) விற்பனை மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் ( big billion days ) தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
இந்த பண்டிகைகால விற்பனை நாளை (08 அக்டோபர்) முதல் தொடங்கவுள்ளது. இந்த நிறுவனங்கள் மட்டும் இன்றி மீஷோ, ஜியோ மார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. இந்நிலையில் இந்த சூழலை பயன்படுத்தி மோசடிகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கிறார் சைபர் கிரைம் வல்லுநரான முரளிகிருஷ்ணன் சின்னதுரை. இது குறித்து ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த தகவல்களை பார்க்கலாம்.
மோசடிகள் எப்படி நடைபெறும்; "பண்டிகை கால தள்ளுபடி விற்பனைக்காக அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவங்கள் வெளியிடும் விளம்பர தள்ளுபடி டிஜிட்டல் பிரசுரங்களை பயன்படுத்தி அதேபோன்று போலியான பிரசுரங்களை உருவாக்கி அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாக அறிவிக்கக் கூடும். நீங்கள் அதை பார்த்து பொருளை ஆர்டர் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் எடுக்கப்படும் ஆனால் பொருள் வராது. அதேபோல, உங்கள் வாட்சப் எண்ணிற்கு வரும் லிங்கில் நீங்கள் உள்ளே சென்றால் உங்கள் டேட்டாக்கள் முழுவதும் திருடப்பட்டு அதை வைத்து பணம் கேட்டு தொல்லைகள் வர வாய்ப்பு உள்ளது.
ஆன்லைனில் பொருள் வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது; உங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு வரும் லிங்குகளை தேவையின்றி ஓப்பன் செய்து பார்க்கக்கூடாது. பொருளை ஆர்டர் செய்யும் முன்பு நீங்கள் சரியான வெப்சைட் தளத்தில்தான் இருக்கிறீர்களா இல்லையா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் ஓப்பன் செய்யும் வெப்சைட் அல்லது லிங்கில் Amazon என்பதற்கு பதிலாக Amaz0n (Amaz ' zero 0' n)என இருக்கலாம். ஆனால் திடீரென பார்ப்பதற்கு இரண்டும் ஒரே போன்றுதான் தோற்றம் அளிக்கும். இதை நம்பி நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யலாம். இதனால் கவனமுடன் இருங்கள் என அறிவுரை வழங்குகிறார் முரளிகிருஷ்ணன் சின்னதுரை.
தெரியாமல் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள்... என்ன செய்வது? இந்த பண்டிகை காலத்திலும் சரி மற்ற நேரங்களிலும் சரி ஆன்லைனில் பொருள் வாங்கி உங்கள் பணம் மோசடி செய்யப்பட்டு விட்டது என்றால் 24 மணி நேரத்திற்குள் சைபர் க்ரைமின் இலவச தொலை பேசி எண்ணான '1930' -க்கு அழைத்து புகாரை பதிவு செய்யலாம். உடனடியாக உங்கள் வங்கி கணக்கை தற்காலிகமாக முடக்கி வையுங்கள். இவை எல்லாவற்றிக்கும் மேலாக ஆன்லைன் ஆர்டரில் செல்போனுக்கு பதிலாக வந்த செங்கல் போன்றவற்றை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இத்தகைய மோசடியை தவிர்க்க வேண்டுமானால் பார்சலை பிரிக்கும் முன்னதாக முழுவதுமாக வீடியோ பதிவு செய்து வைப்பது பலன் தரும். முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்! பண்டிகைகால மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.
இதையும் படிங்க:வரப்போகுது பண்டிகைக்கால விற்பனை... ஆன்லைனில் வாங்க இது சரியான வாய்ப்பா?