சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் வீடுகளில் விதவிதமான உணவுகள் செய்யத் தயாராகி வருவீர்கள். சைவத்தில் இது வேண்டும் அசைவத்தில் அது வேண்டும் என லிஸ்ட் போட ஆரம்பித்து இருப்பீர்கள். அதற்கு முன்பு, உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படாத வகையில் தீபாவளி உணவுகளை எப்படி கட்டுப்பாட்டோடு உண்ண வேண்டும் என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுங்கள் என அறிவுறுத்துகிறார் பொதுநல மருத்துவர் சாந்தகுமார். இது தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியைப் பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கான பரிந்துரை: நீரிழிவு நோயாளிகள் என்னதான் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் உணவில் அவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை தானே வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் ஸ்வீட் சாப்பிடலாம் அல்லது பாயாசம் குடிக்கலாம் அல்லது வீட்டில் சமைக்கும் அசைவம் மற்றும் சைவத்தை ஒரு கட்டுக் கட்டலாம் பிறகு மாத்திரை போட்டுக்கொள்ளலாம் என நினைத்தால் அது உங்கள் உடல்நிலையை மிகவும் ஆபத்தான நிலைக்குக்கூட அதாவது சர்க்கரை உடலில் அதிகரித்து கோமா நிலைக்குச் சென்று விடும் அபாயம் கூட ஏற்படலாம் எனக் கூறியுள்ளார் மருத்துவர் சாந்தகுமார்.
பொதுவாகவே ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை முடிந்த அடுத்த நாளே வழக்கத்திற்கு மாராக ஏராளமான சர்க்கரை நோயாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை நோக்கி வரும் நிலையில் இத்தகைய அவல நிலையை மக்கள் நினைவில் கொண்டு உங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் ஊக்குவிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்துமா நோயாளிகள்:ஆஸ்துமா நோயாளிகளுக்கு பொதுவாகவே மூச்சு திணறல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் இருக்கும். அவர்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது, நீண்ட நேரம் அந்த புகையைச் சுவாசிப்பது உள்ளிட்ட சூழல்களில் இருந்தால், அவர்களுக்கு மூச்சு திணறல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல உடல்நல பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது.
மேலும், மழை மற்றும் பனி போன்ற காலநிலை மாற்றம் நிலவி வரும் நிலையில் அதனுடன் பண்டிகை நாளில் குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம் உள்ளிட்ட உணவுகளை உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். பண்டிகை நாளில் மட்டும் அல்ல பொதுவாகவே இதுபோன்ற உணவுப் பழக்க வழக்கம் உடல்நலனுக்கு ஆரோக்கியமானது அல்ல எனவும் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
உணவு உட்கொள்ளும்போது கவனம் தேவை: தீபாவளி அன்று சைவம், அசைவம் உள்ளிட்ட உணவுகள், இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் பாலில் தயார் செய்யப்பட்ட உணவுகள் உள்ளிட்ட அனைத்தும் வீட்டில் ரெடியாக இருக்கும். அத்தனையும் உட்கொள்ள வேண்டும் என்ற ஆசை, வீணடிக்கக்கூடாது என்ற எண்ணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அனைத்தையும் ஒரே அடியாக உட்கொள்ளக்கூடாது. உடல் என்பது கோவில் போன்றது என்ற எண்ணம் இருக்க வேண்டும்.