ஐதராபாத்:பொதுவாக பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்சிதை மாற்றம் காரணமாக அதிகரிக்கிறது. இந்த அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரத்தலும் குறைகிறது. பெரும்பாலும் பிரசவத்துக்கு பின் சர்க்கரை அளவு குறைந்து சமநிலை அடைந்து விடும். பலருக்கு தொடர வாய்ப்புள்ளது.
இதையே கர்ப்பகால நீரிழிவு நோய் என்கிறோம். இந்த நோயை கர்ப்பகாலத்தின் போது உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். அதாவது சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். இதுகுறித்து பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் Northwestern University நடத்திய ஆய்வில், பெண்கள் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு விளக்குகளை அணைப்பதன் மூலம் கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை குறைக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து Northwestern பல்கலைகழகத்தின் உதவி பேராசிரியர் மின்ஜீ கிம் கூறுகையில், தூங்குவதற்கு முன்பு கணினி மானிட்டர், ஸ்மார்ட்போன் திரைகள், எல்இடி விளக்குகளை பயன்படுத்தும் கர்ப்பிணிகள் மற்றும் பயன்படுத்தாத கர்ப்பிணிகளின் இடையே ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வந்தோம். இதில் கர்ப்பிணிகளின் மாதாந்திர பரிசோதனை முடிவுகள், ரத்த பரிசோதனை முடிவுகளும் அடங்கும். இவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து பார்க்கையில், 3 மணி நேரத்திற்கு முன் விளக்குகளை அணைக்காமல் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அளவு கர்ப்பகால நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது.