ஸ்ருதி, எண்டோக்ரினோலஜி மற்றும் டையபெட்டாலஜி தலைமை நிபுணர் சென்னை: சர்க்கரை நோய் இன்றைய காலகட்டத்தில் சமூக நோயாக மாறி இருக்கிறது. இதற்கு மருத்துவர்கள் கூறும் முக்கிய காரணம், உடல் உழைப்பு இன்றி உணவு உட்கொள்வதுதான். தாத்தா, பாட்டி காலத்தில் கால் நோகப் பல மயில் தூரம் நடந்து செல்வதும், நம் அப்பா, அம்மா காலத்தில் சைக்கிள் ஓட்டி பயணம் மேற்கொள்வதும், வீடுகளில் ஆட்டாங்கல், அம்மிக்கல் மூலம் ஆட்டி, அரைத்துச் சமையல் செய்வதும், வீட்டின் தோட்டங்களிலும், வீட்டின் பின்புறத்திலும் அன்றாட உணவுக்குத் தேவையான காய்கறிகளைச் சுத்தமான முறையில் வளர்த்து அதைச் சமைத்து உண்டும் வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களுக்கெல்லாம் வராத இந்த சர்க்கரை நோய் இன்று பிறந்த குழந்தை முதல் 30 வயது தாண்டாத இளைஞர்கள் இளம் பெண்கள் வரை பலரையும் தாக்கி வருகிறது. இதற்கான வெளி உலக காரணங்கள் ஆயிரம் இருக்கட்டும், முக்கிய காரணம் வீடுகளிலும், தனிப்பட்ட முறையிலும் நாம் மேற்கொள்ளும் வாழ்வியல் நடைமுறைதான் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
இந்த சர்க்கரை நோய் வரும் வரை அச்சம் இல்லாமல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அத்தனை விஷயங்களையும் மேற்கொள்ளும் நாம், சர்க்கரை நோய் வந்தவுடன், உடைந்துபோய் உட்காருவது ஏன் என்பதுதான் இங்குக் கேள்வி? சர்க்கரை நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து, சென்னை ரேலா மருத்துவமனையின் எண்டோக்ரினோலஜி மற்றும் டையபெட்டாலஜி தலைமை நிபுணர் ஸ்ருதி ஈடிவி பாரத் தமிழ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியைப் பார்க்கலாம்.
சர்க்கரை நோய் எத்தனை வகை: டைப் 1, டைப் 2, கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய் உள்ளிட்ட சில வகை சர்க்கரை நோய்கள் இருக்கின்றன. உலக அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த சர்க்கரை நோய் மக்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 11 பேரில் ஒருவருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது. இந்த சர்க்கரை நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில்தான், உலக சர்க்கரை நோய் தினம் (World Diabetes Day) ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்க்கரை நோய் வராமல் இருக்க என்ன செய்யலாம்?உடற் பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி என்பவை ஒவ்வொருவரின் வாழ்விலும் அங்கமாக மாற வேண்டும். குறைந்த கலோரிகள் கொண்ட உணவு, அதிக மாவுச் சத்து நிறைந்த உணவு , அதிக இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாகப் பெற்றோருக்குச் சர்க்கரை இருக்கும் பட்சத்தில் அது அவர்களின் பிள்ளைகளுக்கு வர 95 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. இதனால் முக்கியமாக அவர்கள் இந்த உணவுகளை கட்டுப்பாட்டுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உயரத்திற்கு ஏற்றவாறு உடல் பருமனைச் சரியான அளவில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் மாற்றத்தால் வரும் இந்த நோயை அதன் வழியிலேயே சென்று கட்டுப்படுத்த முடியும், அந்த வகையில் சிறுதானியம் அடங்கிய உணவை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும். பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கத்தை வீடுகளில் பின்பற்ற வேண்டும்.
கருஞ்சீரகம், வெந்தையம், ஆவாரம்பூ டீ, பெரிய நெல்லி போன்றவற்றை வீட்டில் அனைவரும் உட்கொள்ள வேண்டும். இரவு உணவைக் கட்டாயம் 8 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். இத்தனை வழிகாட்டுதல்களையும் படிக்கும்போதே தலை சுற்றுகிறதே எப்படிப் பின்பற்றுவது என யோசிக்க வேண்டாம். அனைத்தும் நாம் நடைமுறைப் படுத்தும் வரைதான் சிக்கல்... தொடங்கி விட்டால் தொடர்ந்து விடும். இந்த வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், சர்க்கரை நோயில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.
சர்க்கரை நோய் வந்த பிறகு என்ன செய்யலாம்? சரி சர்க்கரை நோய் வந்துவிட்டது இப்போது என்ன செய்யலாம் என்று யோசனை செய்யுங்கள் ஆனால் இதனால் மன அழுத்தமோ, அச்சமோ, பதட்டமோ கொள்ளாதீர்கள். சர்க்கரை நோய் வந்த பிறகும் உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நம்புங்கள். நீங்கள் சரியான உடற்பயிற்சி மேற்கொண்டு உணவு மற்றும் வாழ்வியல் நடைமுறையில் சரியாக இருந்தாலே இந்த சர்க்கரை நோயை வென்று ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் மருத்துவர் ஸ்ருதி.
கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள்:
- மருத்துவர் வழங்கும் வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றுதல்
- மருந்து, மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்ளுதல்
- உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருத்தல்
- நேரத்திற்கு நேரம் சரியாகச் சாப்பிடுதல்
- கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அளவிட்டு உட்கொள்ளுதல்
- அனைத்து உணவுகளையும் அளந்து உட்கொள்ளுதல்
- நாள்தோறும் 45 முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்
- நேரத்திற்கு உறங்கி எழுதல்
- மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்
- வீட்டில் குளுக்கோ மீட்டாரை வைத்து இரத்த சர்க்கரை அளவை கண்காணித்தல்
- உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைத் தக்க வைத்துக்கொள்ளுதல்
- மது அருந்துதல் மற்றும் புகையிலை பயன்பாட்டை அரவே தவிர்த்தல்
- கால் அல்லது உடலின் மற்ற பாகங்களிலோ காயம் ஏற்படாத வகையில் கவனமாக இருத்தல்
- செருப்பு இல்லாமல் நடப்பதைத் தவிர்த்தல்
- தேவைப்படும் பட்சத்தில் ஆயுர்வேதம், அலோபதி, சித்த மருத்துவம் என ஒருங்கிணைந்த சிகிச்சை மேற்கொள்ளுதல்
இவை அத்தனையும் நீங்கள் உங்கள் வாழ்வில் நாள்தோறும் சரியாக கடைபிடித்து வாருங்கள். காலப்போக்கில் அது உங்களுக்குப் பழகி விடும். அதன் பிறகு இந்த சர்க்கரை நோய் என்பது உங்களுக்குப் பெரிய பாரமாகவோ, கவலையாகவோ தெரியப்போவது இல்லை. சர்க்கரை நோய் ஒரு தண்டனை அல்ல.. வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்கிறார் மருத்துவர் ஸ்ருதி.
இதையும் படிங்க:பச்சிளம் குழந்தைகளின் சருமத்திலும் ஏற்படும் வறட்சி.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?