வாஷிங்டன்:கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலினில் இருந்து திசுக்கள் தங்களுக்கு தேவைப்படும் குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே நாம் சர்க்கரை நோய் (நீரிழிவு) என்கிறோம். தற்போதெல்லாம் வயது பேதமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
2 வகைகள் என்னென்ன?:பொதுவாக சர்க்கரை நோயை இரண்டாக பிரிக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பே இல்லாதது வகை 1-ஐ சேர்ந்தது. இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படும். உடலுக்கு தேவையான அளவை விட, மிகவும் குறைவான அளவில் இன்சுலின் சுரப்பது வகை 2. இது மரபு ரீதியாக வருவதாக அறியப்படுகிறது.
குழந்தைகளுக்கு பாதிப்பு: இந்நிலையில் அமெரிக்காவில் செயல்படும் வேக் ஃபாரஸ்ட் மருத்துவ பல்கலைக்கழகம் (Wake Forest University School of Medicine) நடத்திய ஆய்வில், சர்க்கரை நோயின் வகை 1 மற்றும் வகை 2 ஆகியவற்றால் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹிஸ்பானிக் (ஸ்பானிஷ் மொழி பேசுவோர்) குழந்தைகள், ஹிஸ்பானிக் இல்லாத கறுப்பின குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு சர்க்கரை நோய் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் அதிகரிப்பு: இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக கடந்த 2000ம் ஆண்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் உதவியின்படி, வேக் ஃபாரஸ்ட் மருத்துவ பல்கலைக்கழகம் பல்வேறு ஒருங்கிணைப்பு மையங்களை உருவாக்கியது. பின்னர் 2002ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள 18,000 பேர் வகை 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.