ஹைதராபாத்: பொதுவாக கோடை காலத்தில் தான் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வானிலை என்னவாக இருந்தாலும், மக்கள் எப்போதும் தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். எந்த பருவகாலத்திலும் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை அல்லது நீரிழப்பு சில நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது, என பலகட்ட ஆய்வுகளின் முடிவுகளில் தெரியவந்துள்ளது.
'லான்செட்' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கு அகால மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது என்றும், அது லிட்டருக்கு 145 மில்லி என்ற வரம்பை மீறினால், ஒரு நபருக்கு அகால மரணம் ஏற்படும் வாய்ப்பு 21 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் இது நாள்பட்ட நோய்களை உருவாக்கும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
'நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,குளிர்காலத்தில் கூட நீரிழப்பு பிரச்சனை ஏற்படலாம் என்றும், கோடையில் ஏற்படும் அதே விளைவுகளைக் குளிர்காலத்தில் ஏற்படும் நீரிழப்பும் உடலில் ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.
மனித உடலில் பாலினம் மற்றும் வயதைப் பொறுத்து சுமார் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் அடங்கியுள்ளது. இதில், மூளையில் 85 சதவீதமும், எலும்புகளில் 22 சதவீதமும், தோல் பகுதியில் 20 சதவீதமும், தசைகளில் 75 சதவீதமும், ரத்தத்தில் 80 சதவீதமும், நுரையீரலில் 80 சதவீதமும் தண்ணீர் அடங்கியுள்ளது. இந்த உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கவும், அவற்றின் வளர்ச்சி சரியாக நடைபெறவும், சரியாகச் செயல்படவும், தேவையான அளவு தண்ணீர் உடலில் இருக்க வேண்டும்.
நம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றால், உடலின் மெட்டபாலிசம் அப்படியே இருக்கும், இதனால் பல பிரச்சனைகள் மற்றும் அஜீரணம் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. இது தவிர, உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படுவதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது சிறுநீர் மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கிறது.