சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் தாய்ப்பால் மற்றும் தூக்கம் இன்மை தொடர்பான பிரச்சனைகளால் ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்கக் குழந்தைகள் நல ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டுதலில் தந்தையர்கள் கவனம் செலுத்துவது இல்லை என்றும், அப்படியான சூழலில் உள்ள குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தாய்ப்பாலூட்டுதல் மற்றும் பாதுகாப்பான தூக்கம் குழந்தைக்கு வழங்குவதன் மூலம் அப்பாக்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இதன் மூலம் ஆய்வாளர்கள் அதை உறுதி செய்துள்ளனர். குழந்தையின் வளர்ச்சியில் தாய்க்கு மட்டும்தான் பங்கு உண்டு என்ற அடிப்படையில் அப்பாக்கள் பலர் குழந்தைக்கான தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் தூக்கத்தில் கவனம் செலுத்துவது இல்லை. ஆனால் குழந்தையின் ஆரோக்கியத்தில் தாயைப் போலத் தந்தைக்கும் பங்குண்டு எனவும், தாய்ப்பால் ஊட்டுவதற்குத் தாயை ஊக்குவிப்பது தந்தையின் பணியாகும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், இது குறித்து ஆய்வாளரும் மருத்துவருமான ஜான் ஜேம்ஸ் பார்க்கர் கூறுகையில், முதல்முறை தந்தையான ஆண்கள் 250 பேரிடம் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள குழந்தை மருத்துவம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது எனவும் இதில் பலர் தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் குழந்தையின் உறக்கம் போன்றவற்றில் பெரிதும் கவனம் செலுத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது எனக்கூறியுள்ளார்.